கனிமொழிக்கு விஜய் வாழ்த்து அமைச்சர் உதயநிதி 'அப்செட்'
கனிமொழிக்கு விஜய் வாழ்த்து அமைச்சர் உதயநிதி 'அப்செட்'
ADDED : ஜன 07, 2024 02:40 AM
சென்னை:தி.மு.க., துணை பொதுச்செயலர், கனிமொழி, 56வது பிறந்த நாளை கொண்டாடினார்.
'துாத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால், பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க வருவதையும், பூங்கொத்து உள்ளிட்ட பொருட்கள் அனுப்புவதையும் தவிர்த்து, தேவைப்படுவோருக்கு உதவ வேண்டும்' என, கட்சியினருக்கு முன்கூட்டியே கனிமொழி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள், கனிமொழிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக, நடிகர் விஜய் தொலைபேசியில் கனிமொழிக்கு பிறந்த நாள் தெரிவித்து உள்ளார்.
கட்சி துவங்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ள விஜய், சமீபத்தில் திருமாவளவன், பா.ம.க., தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக கனிமொழிக்கும் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதே நேரத்தில், கடந்த நவம்பர் 27ல் பிறந்த நாள் கொண்டாடிய அமைச்சர் உதயநிதிக்கு, விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை.
கனிமொழியுடன் தொலைபேசியில் உரையாடிய விஜய், துாத்துக்குடியில் முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருவதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
நடப்பு அரசியல் நிலவரங்கள் குறித்தும் இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.
நேரில் வந்து நிவாரண உதவிகள் வழங்கியதை பாராட்டி, விஜய்க்கு கனிமொழி நன்றி தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையில், 'சக நடிகராக இருந்தும் தன்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்காத நடிகர் விஜய், அத்தை கனிமொழிக்கு வாழ்த்து தெரிவிப்பது புதிராக இருக்கிறதே' எனக் கேட்டு அமைச்சர் உதயநிதி ஆதங்கப்பட்டதாக ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.