விமானம் ஏறி சென்ற விஜய் வீட்டை விட்டு வரவில்லை: பிரேமலதா
விமானம் ஏறி சென்ற விஜய் வீட்டை விட்டு வரவில்லை: பிரேமலதா
ADDED : அக் 06, 2025 01:10 AM

கிருஷ்ணகிரி: ''விமானத்தில் ஏறி வீட்டிற்கு சென்ற விஜய், இதுவரை வெளியே வரவில்லை,'' என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில், தே.மு.தி.க., சார்பில், நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பிரேமலதா பேசியதாவது:
கரூரில் த.வெ.க., தலைவர் விஜயின் பிரசாரத்துக்கு, பாதுகாப்பு கொடுக்க தவறியதால், 41 பேர் உயிரிழந்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை, நேரடியாக சென்று பார்த்தேன்.
மக்களை சந்திக்க தாமதமாக வந்ததே விஜய் செய்த பெரிய தவறு. சினிமா சூட்டிங்கிற்கு சரியாக செல்லும் விஜய், கரூருக்கு தாமதமாக வந்தார். சம்பவம் நிகழ்ந்த பின், விமானம் ஏறி வீட்டிற்கு சென்றவர் இதுவரை வெளியே வரவில்லை.
மகாமகத்தில் மக்கள் இறக்கவில்லையா; கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து மக்கள் சாகவில்லையா. அதற்கு யாரை கைது செய்தனர்? கரூரில், பாதிக்கப்பட்ட மக்களை விஜய் நேரில் சந்தித்து நிதியுதவி கொடுக்க வேண்டும்.
கிருஷ்ணகிரியில், மா விவசாயிகளுக்கு இழப்பீடு தருவதாக, அமைச்சர் சக்கரபாணி உறுதி அளித்து, மூன்று மாதங்களாகிறது. இன்னமும் நிதிஉதவி வழங்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.