தனித்தன்மையை இழந்து விட்டார் விஜய்; அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கிண்டல்
தனித்தன்மையை இழந்து விட்டார் விஜய்; அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கிண்டல்
UPDATED : டிச 21, 2025 07:31 AM
ADDED : டிச 21, 2025 07:26 AM

சென்னை: 'த.வெ.க., தலைவர் விஜய்க்கு தனித்தன்மை போய் விட்டது' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் கூறினர்.
'தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., - த.வெ. க., இடையே தான் போட்டி' என, த.வெ.க., தலைவர் விஜய், ஈரோடில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அதற்கு, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் அளித்துள்ள பதில்:
ஜெயகுமார்: ஒரு கட்சி என்றால், அதற்கு தனித்தன்மை இருக்க வேண்டும். ஆனால், த.வெ.க., தலைவர் விஜய், எம்.ஜி.ஆர்., என்ற முகமூடி அணிந்து வருகிறார். அவருக்கென தனித்தன்மை இல்லாததால், அவர் இந்நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். என்னதான் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முகமூடி அணிந்து வந்தாலும், இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு போட்டவர்கள், ஒரு நாளும் எந்த கட்சிக்கும் மாற்றி ஓட்டு போட மாட்டார்கள். விஜய், சில அரசியல் கட்சிகள் களத்தில் இல்லை என பொதுவாக பேசி உள்ளார்.
எங்களை குறிப்பிட்டு பேசியிருந்தால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கலாம். முளைத்து மூன்று இலை விடாதவர்கள், அரசியல் ஆத்திசூடி அறியாதவர்கள் இப்படித்தான் பேசுவர்.முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை, அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பனியனை கிழித்துக் கொண்டு சட்டசபையில் இருந்து வெளியே வந்தார். அவர் எதிரிக்கட்சியாக பேசினார். அந்த எதிரிக்கட்சி, இன்று ஆளுங்கட்சியாக உள்ளது. வரும் தேர்தலில் உதிரி கட்சியாக போய்விடும்.
செல்லுார் ராஜு : எம்.ஜி.ஆர்., புகழ் பாடாதவர்கள், அரசியலில் செல்வாக்கு பெற முடியாது. தமிழக முதல்வரே, 'எம்.ஜி.ஆர்., எங்கள் பெரியப்பா' என்பார். புதிய கட்சியினரும், தங்கள் கட்சியை மக்களிடம் கொண்டு செல்ல, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழ் பாடித்தான் ஆக வேண்டும். இருந்தபோதும், விஜயின் தந்திரப் பேச்சை நம்பி, அ.தி.மு.க.,வினர் ஒருநாளும் விஜய் பக்கம் போக மாட்டார்கள்.
ஏனெனில், எம்.ஜி.ஆர்., துவக்கிய அ.தி.மு.க., இன்றும் உள்ளது; அதற்கு இரட்டை இலை சின்னம் உள்ளது. அ.தி.மு.க.,வை வழிநடத்தும் பழனிசாமி, பல்வேறு திட்டங்களை, தன் ஆட்சியில் செயல்படுத்தி உள்ளார். 'பூச்சி மருந்தில் ஊழல் செய்யலாம்' என கண்டறிந்தவர் கருணாநிதி. அடுத்து ஒலிக்கற்றையில் ஊழல் செய்தனர்.
இம்முறை டாஸ்மாக் கடையில், பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிக்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர். விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில், தி.மு.க., போல் யாராலும் முடியாது. எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க., தான். அந்த தீய சக்தியை ஒழிக்கும் வரை, அ.தி.மு.க., என்றைக்கும் ஓயாது.
எம்.ஜி.ஆரையும், அவருடைய ஆதரவாளர் களாக இருந்த அ.தி.மு.க ., தலைவர்களையும் தன் பக்கம் ஈர்த்து, கட்சி நடத்தலாம் என கணக்கு போடுகிறார் விஜய். அவர் நினைப்பதெல்லாம் பகல் கனவாகவே முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

