டில்லியில் விஜய்; மும்பையில் த்ரிஷா: கூட்டணி ரகசியம் உடைக்கப்படுமா?
டில்லியில் விஜய்; மும்பையில் த்ரிஷா: கூட்டணி ரகசியம் உடைக்கப்படுமா?
ADDED : மார் 15, 2026 01:47 AM

- நமது நிருபர் -:
த.வெ.க., தலைவர் விஜய் மற்றும் உடன் வந்தவர்களின் பைகளில், வெளிநாட்டு மது பாட்டில், கத்தரிக்கோல் இருந்ததால், நீண்ட சோதனைக்குப் பின், விஜயின் தனி விமானம் தாமதமாக டில்லி புறப்பட்டுச் சென்றது.
கரூரில் விஜய் பங்கேற்ற பிரசார கூட்ட நெரிசலில், 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இது தொடர்பான விசாரணைக்கு, இன்றும் விஜய் டில்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதற்காக, சென்னையில் இருந்து டில்லி செல்ல, நேற்று மாலை 3:20 மணிக்கு, விஜய் விமான நிலையம் வந்தார்.
மதுபாட்டில், கத்தரிக்கோல்
அவருடன் த.வெ.க., நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், ஜெகதீஷ் உள்ளிட்ட, ஏழு பேர் வந்தனர். விமானத்திற்குள் ஏறுவதற்கு முன், விஜய் மற்றும் அவருடன் வந்தவர்களின் உடைமைகளை, மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, ஆதவ் அர்ஜுனா எடுத்து வந்த விஜய் பையில், வெளிநாட்டு மதுபாட்டில் ஒன்றும் கத்தரிக்கோலும் இருந்ததை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர்.
இது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டதும், 'தாடி, மீசையை வெட்டுவதற்காக கத்தரிக்கோல் வைத்திருக்கிறேன்' என, விஜய் தெரிவித்துள்ளார்.
உடனே, 'மது பாட்டில் எதற்கு?' என அதிகாரிகள் கேட்டுள்ளனர். 'கொண்டு வரப்பட்டு விட்டது. வேண்டுமானால் இங்கேயே விட்டுச் செல்கிறோம்' என விஜயுடன் வந்தோர் தெரிவிக்க, பாதுகாப்பு படையினர், மதுபாட்டிலையும் கத்தரிக்கோலையும் எடுத்துச் செல்ல அனுமதி மறுத்து விட்டனர்.
இதன் காரணமாக, விஜயின் தனி விமானம், 44 நிமிடங்கள் தாமதமாக, மாலை 4:04 மணிக்கு டில்லி புறப்பட்டது.
கரூர் வழக்கு தொடர்பாக, ஏற்கனவே இரு நாட்கள், டில்லியில் விஜயிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தியுள்ளது. மூன்றாவது முறையாக இன்று காலை 10:00 மணிக்கு, அவரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர்.
இந்த விசாரணை, நாளையும் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், சென்னை விமான நிலையத்தில் சோதனையின் போது நடந்ததாக கூறப்படும் எந்த சம்பவங்களும் நடக்கவில்லை என, த.வெ.க., இணை பொதுச்செயலர் நிர்மல்குமார் மறுத்துள்ளார்.
நடிகர் விஜய், சி.பி.ஐ., விசாரணைக்காக டில்லி சென்றாலும், அங்கு கூட்டணி தொடர்பாக முக்கிய பிரமுகர்களை சந்தித்துப் பேச இருப்பதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
கடுமையான அழுத்தம்
அவர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக விஜய் அறிவித்திருந்தாலும், கடந்த சில நாட்களாக தே.ஜ., கூட்டணிக்கு வரச் சொல்லி, பா. ஜ., தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டது.
அதனால், தன்னுடைய முடிவை விஜய் மறு பரிசீலனை செய்யலாமா என, கட்சியின் முக்கிய தலைவர்களிடம் கேட்டுள்ளார்.
பலரும் 'கூட்டணிக்கு செல்லலாம்' என பச்சைக் கொடி காட்ட, கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் வாயிலாக, மாவட்ட செயலர்களிடம் கூட்டணி தொடர்பாக கருத்து கேட்கப்பட்டது. 90 சதவீதம் பேர், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இணைய பச்சைக் கொடி காட்டியதால், அதை நோக்கிய பயணத்தில் விஜயும் உள்ளார்.
சி.பி.ஐ., விசாரணைக்காக டில்லி சென்றிருக்கும் விஜய், அப்பணியை முடித்து தமிழகம் திரும்பியதும், கூட்டணி தொடர்பாக தன்னுடைய தெளிவான முடிவை அறிவிப்பார்.
விஜய் டில்லி செல்வதற்கு முதல் நாளே, அவருடைய தோழியான நடிகை த்ரிஷா, மும்பைக்கு அவசரமாக புறப்பட்டுச் சென்றார். அங்கு, தனக்கு வேண்டப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களை அவர் சந்தித்துள்ளார்.
பின், அவர் டில்லிக்கு வந்து விஜயுடன், கூட்டணி தொடர்பாக பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார். இதையும் முக்கியமாக வைத்தே, கூட்டணி தொடர்பாக விஜய் முடிவெடுப்பார் என தெரிகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

