கட்சி பூஜையில் பங்கேற்காமல் கடைசி பட பூஜையில் பங்கேற்ற விஜய்
கட்சி பூஜையில் பங்கேற்காமல் கடைசி பட பூஜையில் பங்கேற்ற விஜய்
UPDATED : அக் 04, 2024 03:20 PM
ADDED : அக் 04, 2024 03:19 PM

எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் தனது 69வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்துடன் அவர் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் பயணிக்க இருப்பதால் இதுவே அவரது கடைசி படமாக பார்க்கப்படுகிறது. பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தில் ஹிந்தி நடிகர் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரியாமணி, பிரகாஷ்ராஜ், நரைன், மமிதா பைஜூ, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடிப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் இன்று (அக்.,4) இப்படத்தின் பூஜை சென்னையில் நடந்துள்ளது. இதில் நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே, நடிகர்கள் பாபி தியோல், நரைன், இயக்குனர் எச்.வினோத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
![]() |
இதேநாளில், இன்று அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் யாகம் எல்லாம் வளர்த்து புஸ்ஸி ஆனந்த் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வி.சாலையில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) மாநாட்டிற்கான பந்தல் கால் நடும் நிகழ்வும் நடந்தேறியது. அரசியலில் முதல்படியாக பார்க்கப்படும் முதல் மாநில மாநாட்டுக்கான பந்தல்கால் நடும் விழாவில் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காகவே அங்கு பெருமளவு ரசிகர்கள் கூடினர். ஆனால் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளே பங்கேற்றதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
பந்தல் கால் நடும் விழா தானே என அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தான் கதாநாயகனாக நடிக்கும் கடைசி படத்தின் பூஜைக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என சிலர் கூறலாம். ஆனால், அரசியல் களத்தில் ஒவ்வொரு அடியும் மிகவும் கவனமாகவே எடுத்து வைக்க வேண்டும் என்பதையும், தாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை அனைவரும் உன்னிப்பாக கவனிப்பார்கள் என்பதையும் நடிகர் விஜய் அறிந்திருக்கிறாரா எனத் தெரியவில்லை.
![]() |
சினிமா என இதுவரை தான் பயணித்த பாதையில் இருந்து மாறி, இனி அரசியல் பாதையில்தான் பயணிக்க உள்ளதாக தீர்க்கமாக சொன்ன விஜய், தனது முதல் மாநாட்டுக்கான பந்தல் கால் நடும் நிகழ்வில் கூட பங்கேற்காமல், சினிமா தான் முக்கியம் என தனது கடைசி பட பூஜையில் பங்கேற்க சென்றது விவாதத்தை கிளப்பியுள்ளது.