ADDED : செப் 23, 2024 01:52 AM

சென்னை: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் வெற்றி பெற்ற, 70 குழந்தைகளை ஊக்கப்படுத்தும் விழா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனையில், நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற, மத்திய இணை அமைச்சர் முருகன் கூறியதாவது:
நாட்டில் உள்ள உயர்ந்த ஆய்வகத்தில் ஆய்வு செய்து, திருப்பதி பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், கோவில் நிர்வாகத்துடன் தொடர்பில்லாத மாற்று மதத்தினரை அறங்காவலராக நியமனம் செய்தது தான், இதுபோன்ற பிரச்னைகளுக்கு காரணம்.
நடிகர் விஜய் கட்சி மாநாடு, தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்ற அச்சம், தி.மு.க., அரசிற்கு உள்ளது. தமிழகத்தில் தி.மு.க., அரசு, வேறு எந்தக் கட்சியும் வளர்ந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.