sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க., எதிர்ப்பை கூர் தீட்டும் விஜய்!

/

தி.மு.க., எதிர்ப்பை கூர் தீட்டும் விஜய்!

தி.மு.க., எதிர்ப்பை கூர் தீட்டும் விஜய்!

தி.மு.க., எதிர்ப்பை கூர் தீட்டும் விஜய்!

20


UPDATED : நவ 03, 2024 02:31 PM

ADDED : நவ 03, 2024 02:16 PM

Google News

UPDATED : நவ 03, 2024 02:31 PM ADDED : நவ 03, 2024 02:16 PM

20


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நடிகர் விஜயின் த.வெ.க., செயற்குழுவில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் மூலம், தி.மு.க.,தான் முதல் அரசியல் எதிரி என்பது தெள்ளத்தெளிவாக தெரியவந்துள்ளது.

மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டதாக நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் குஷி மூடில் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். மாநாட்டு குஷி, தீபாவளி கொண்டாட்டம் என கட்சி தொண்டர்கள் ஹேப்பி மூடில் இருக்கும் சூழலில் அந்த சந்தோஷத்துடன் அப்படியே அலுங்காமல் குலுங்காமல் தமது கட்சியின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார் நடிகர் விஜய்.

பெரும் எதிர்பார்ப்புடன் நடந்து முடிந்த இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மூலமாக சில முக்கிய அறிவுரைகளை விஜய் அளித்திருக்கிறார். குறிப்பாக தம்மையும், கட்சி மற்றும் கொள்கைகளை விமர்சிப்போரை கண்டுகொள்ள வேண்டாம், தரக்குறைவான, கண்ணியமற்ற வார்த்தைகளை சமூக வலைதளங்களில் பயன்படுத்த வேண்டாம் என்று அட்வைஸ் செய்துள்ளார்.

பதிலுக்கு பதில், அறிக்கைக்கு அறிக்கை என்று தான் அரசியல் களத்தில் கட்சிகள் களமாடும். ஆனால் இங்கு நிலைமை வேறாக இருக்கிறதே என்று எண்ணிய தொண்டர்களுக்கு தீர்மானங்கள் மூலம் தமது அரசியல் பாதை என்ன, களத்தின் எதிரி யார் என்பதை தெளிவாக கோடிட்டு காட்டி விட்டார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இது குறித்து அவர்கள் கூறி உள்ளதாவது; பொதுவாக அரசியல் கட்சியை நடத்துபவர்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்களை அழைத்து பேசுவது வழக்கம். அரசியல் களம் எப்படி உள்ளது? மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் தொண்டர்களின் மனோநிலை என்ன என்பதை 'பல்ஸ்' பார்ப்பது உண்டு. அதற்காகவே கூட்டம் கூட்டி, மக்களின் எண்ணங்களை தீர்மானமாக நிறைவேற்றி அறிவிப்பர்.

அப்படித்தான் புதியதாய் பிறந்துள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்து முடிந்து உள்ளது. கூட்டத்தில் மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.இதில் பெரும்பான்மையான தீர்மானங்களில் தி.மு.க., மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு உள்ளன. ஆங்காங்கே சில தீர்மானங்களில் மத்திய பா.ஜ., அரசுக்கு எதிராக இருந்தாலும் அவை பெரியதாக வெளிப்படுத்தப்படவில்லை.

குறிப்பாக, 4வது தீர்மானமான ஜனநாயக கொள்கை தீர்மானம் என்பதை குறிப்பிடலாம். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை கண்டித்துவிட்டு, மக்கள் பக்கம் நின்று மக்களுக்காக போராடுபவர்களை ஒடுக்கும் விதமாக சமூக ஊடகங்கள் மூலமாக தாக்குவதை கடுமையாக எதிர்ப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதுபோன்ற அரசியல் அணுகுமுறையை எந்த கட்சி பின்பற்றினாலும் கண்டிக்கிறோம் என்று கூறாமல், தி.மு.க., ஆட்சியாளர்கள் என்று நேரடியாக குறிப்பிட்டு எதிர்ப்பு நிலைப்பாட்டை கூறி இருக்கிறார். சமூக ஊடகங்களை தி.மு.க., மட்டுமே தவறாக பயன்படுத்துவதாக பொத்தாம் பொதுவாக கூறி தொண்டர்களுக்கு லேசாக சிக்னல் கொடுத்திருக்கிறார் நடிகர் விஜய். செயற்குழுவின் 6வது தீர்மானத்தில் சமூக நீதி பாதையில் பயணிக்கிறோம் என்று தி.மு.க., அரசு கூறுவதை மக்கள் நம்ப மாட்டார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் மத்திய அரசின் மீது பழிபோட்டு தப்பித்துவிடலாம் என்று நினைப்பதாக தி.மு.க.,வை குற்றம்சாட்டி இருக்கிறார்.

7வது தீர்மானத்தில் மாநில தன்னாட்சி என்ற கொள்கைப்படி, கல்வியை மாநில பட்டியலுக்கு மத்திய அரசு திரும்ப வழங்க வேண்டும். அப்படி அளித்தால் நீட் தேர்வை மாநில அரசு ரத்து செய்துவிட்டு மாணவர்கள் மருத்துவக் கனவை நிறைவேற்றலாம். ஆனால் இந்த விஷயத்தில் பொய் வாக்குறுதிகளை (அவர் இங்கு குறிப்பிடுவது உதயநிதி சொன்ன நீட் ரத்து ரகசியம்) அளித்து மக்களை ஏமாற்றுவதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

விளை நிலங்கள் பாதுகாப்பு, ஈழத்தமிழர் விவகாரம், கோவை மெட்ரோ ரயில் பணிகள், மொழிக்கொள்கை என தீர்மானங்கள் இடம்பெற்று உள்ளன. இவை அனைத்தும் மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் தான் உள்ளன. குறிப்பாக, மொழிக் கொள்கை தீர்மானத்தை கவர்னரை நேரடியாக குறிப்பிடாமல் தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கூறி, மத்திய அரசின் பிரதிநிதி என்று சொற்றொடரை பயன்படுத்தி, மறைமுகமான விமர்சனமே செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், மக்கள் மீது வரி என்ற சுமையை அதிகமாக விதித்து, மக்கள் நிலையை தி.மு.க., அரசு கேள்விக்குறி ஆக்கி உள்ளது. சட்டம், ஒழுங்கு சீர்கேடு, போதை பொருள் பழக்கம், கள்ளச் சாராயம் விற்பனை போன்றவற்றை சரிசெய்யாமல், ஆட்சி அதிகாரத்தில் உள்ள குறிப்பிட்ட சிலரின் நலனிலேயே அக்கறையுடன் செயல்படுகிறது என்று கண்டித்துள்ளது.

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பொய்களின் பட்டியலாக ஒரு தேர்தல் அறிக்கை, மகளிர் உரிமைத் தொகை, பரிசுத் தொகுப்பு அறிவிப்பு, மறுபுறம் மதுக்கடைகள் திறப்பு, மின்கட்டண உயர்வு போன்ற தீர்மானங்களில் தி.மு.க., மீது காட்டமான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு இருக்கின்றன.

அதே நேரத்தில் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும், இடைக்கால தீர்வாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்தி, கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

இப்படி நிறைவேற்றப்பட்ட 26 தீர்மானங்களில், மத்திய அரசு என்று குறிப்பிடும்போது ஒன்றிய அரசு என்ற வார்த்தை பிரவாகம் இருந்தாலும், அவை அரசை வலியுறுத்துவதாகவே அமைந்திருக்கின்றன. ஆனால் தி.மு.க., அரசை குறிப்பிடும் தீர்மானங்களில் கண்டனம், விமர்சனம், ஆட்சி செயல்பாடுகள் மோசம், அதிகார போக்கு, பொய் வாக்குறுதி என கடுமையான வார்த்தைகள் இடம்பெற்று உள்ளன.

செயற்குழு கூட்டத்தில் தமது அரசியல் எதிரி யார் என்பதை தெள்ளத்தெளிவாக நடிகர் விஜய் கோடிட்டு காட்டி உள்ளார். 2026ம் ஆண்டு தேர்தல் களத்தில், முழுக்க, முழுக்க தி.மு.க., எதிர்ப்பு என்பதே பிரதானம் என்பதை சொல்லாமல் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

ஆளும்கட்சியின் நடவடிக்கைகள் மீதான விமர்சனமே தமக்கு ஸ்கோர் தரும் என்று எதிர்பார்க்கிறார். அதன் மூலம் மக்களை நேரடியாக எளிதாக 'reach' செய்துவிட முடியும் என்று நினைக்கிறார்.இவ்வாறு அரசியல் பார்வையாளர்கள் கூறி இருக்கின்றனர்.






      Dinamalar
      Follow us