2026ல் விஜய் ஆட்சி அமைப்பார்: தேர்தல் பிரிவு பொதுச்செயலர் ஆதவ் நம்பிக்கை
2026ல் விஜய் ஆட்சி அமைப்பார்: தேர்தல் பிரிவு பொதுச்செயலர் ஆதவ் நம்பிக்கை
ADDED : மார் 29, 2025 06:50 AM

சென்னை; ''அருவருப்பான விமர்சனத்தை விஜய் பொறுமையாக எதிர்கொண்டு, 2026ல் விஜய் ஆட்சி அமைப்பார்,'' என, த.வெ.க., தேர்தல் பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.
அவர் பேசியதாவது:
விஜய் இனி தளபதி இல்லை; அவர் வெற்றி தலைவர். பலமான உள்கட்டமைப்போடு தேர்தல் போருக்கு தயாராகி வருகிறோம். ஊழல் அமைச்சர்கள், ஊழல் குடும்பத்தை துாக்கி எறிய தயாராகி விட்டோம்.
த.வெ.க.,வில் ஜாதி இல்லை. ஆனால், தி.மு.க., வில் ஜாதி இருக்கிறது. அரசியலில் ஜாதியை உருவாக்கியதே தி.மு.க.,தான்.தி.மு.க.,வில் நான் வேலை செய்துள்ளேன். ஜாதி பிரச்னையால்தான் நான் வெளியேறினேன். தி.மு.க.,வில் ஒரே குடும்பம்தான் ஆதிக்கம் செலுத்துகிறது.
வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தனிப் பெரும்பான்மையுடன் த.வெ.க., வெற்றி பெறும். மத்திய அரசை எதிர்ப்பதுபோல் தி.மு.க., நாடகம் ஆடுகிறது. அ.தி.மு.க., நேரடியாக பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துள்ளது. தி.மு.க., மறைமுகமாக பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ளது.
தமிழகத்தில் பா.ஜ.,வை மறைமுகமாக, தி.மு.க., வளர்த்து வருகிறது. மேற்கு வங்கத்தில் இரண்டாவது கட்சியாக பா.ஜ., வந்ததுபோல், தமிழகத்தில் இரண்டாவது இடத்திற்கு நகர்கிறது.
இன்னும் இரண்டு மாதங்களில் உண்மையான போராட்டத்தை, விஜய் நடத்திக்காட்டுவார்.
த.வெ.க.,வினர் மீது வழக்கு பதிவு செய்வர்; மிரட்டுவர். அதற்கெல்லாம், த.வெ.க.,வினர் அச்சப்படக் கூடாது. கூட்டணி குறித்து விஜய் நல்ல முடிவு எடுப்பார். தமிழகம் முழுதும் த.வெ.க., தொழிற்சங்கத்தை உருவாக்குவோம்.
அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., வழியில் விஜய் செல்கிறார். மக்களிடம் உண்மையான போராட்ட எழுச்சியை, அவர் உருவாக்குகிறார். அருவருப்பான விமர்சனத்தை விஜய் மீது வைப்பர். அதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். விமர்சனங்களை பொறுமையாக எதிர்கொண்டு, 2026ல் விஜய் ஆட்சி அமைப்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.