UPDATED : ஆக 29, 2011 05:18 PM
ADDED : ஆக 28, 2011 11:19 PM

சென்னை:''இந்தியர் அனைவரும் சகோதர, சகோதரிகளாக இருந்து ஊழல், வறுமை என்ற சாத்தான்களை நாட்டை விட்டே விரட்டியடிக்க வேண்டும்,'' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.
தே.மு.தி.க., சார்பில் இப்தார் நோன்பு திறப்பு விழா, சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்று தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: எனக்கு தெய்வ நம்பிக்கை நிறைய இருக்கிறது. எனது வீட்டு பூஜை அறையில் அனைத்து மத சாமிப் படங்களையும் வைத்துள்ளேன்.சிலர் சாமி கும்பிட மாட்டேன் என்று கூறிவிட்டு திருட்டுத்தனமாக தெய்வத்தை வழிபடுகின்றனர். ஜாதி, மதத்தை வைத்து மக்களை பிரிப்பதே, சிலருக்கு வேலையாக இருக்கிறது. ஜாபர் சேட் குறித்து பேசியபோது அவரை முஸ்லிம் என்று கருணாநிதி குறிப்பிட்டார். கருணாநிதிக்கு பிரச்னை என்று வரும்போது, மக்களை துண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
ஆடுகளுக்குள் சண்டை நடந்தால், ஓநாய் ரத்தம் குடிக்க காத்திருக்கும் என்று கருணாநிதி கூறுவார். ஆனால், ஆரிய, திராவிடப் போருக்கு தயாராகுங்கள் எனக் கூறி மக்களை துண்டாட பார்ப்பார். ஆங்கிலத்தில் கோவிலை, 'டெம்பிள்' என்றும், தேவாலயத்தை 'சர்ச்' என்றும், மசூதியை 'மாஸ்க்' என்றும் குறிப்பிடுகின்றனர். இந்த மூன்று ஆங்கில வார்த்தைக்கும் ஆறு எழுத்துக்கள் தான் உள்ளன.
இதேபோல குரான், பைபிள், கீதை ஆகிய மூன்று புனித நூல்களின் ஆங்கில வார்த்தைகளுக்கும் ஐந்து எழுத்துக்கள் தான் உள்ளன. எழுத்துக்களுக்குள் ஒற்றுமை இருக்கிறது. அதேபோன்று மனிதர்களுக்குள் ஒற்றுமை வேண்டும். இனத்தில் இந்தியனாக இருக்க வேண்டும்; மதத்தில் மனிதனாக இருக்க வேண்டும். மொத்தத்தில் அனைவரும் சகோதர, சகோதரிகளாக இருந்து ஊழல், வறுமை என்ற சாத்தான்களை நாட்டை விட்டே விரட்டியடிக்க வேண்டும்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.