'டூவிலர்களில் வராதீங்க' ரசிர்களுக்கு விஜய் 'அட்வைஸ்
'டூவிலர்களில் வராதீங்க' ரசிர்களுக்கு விஜய் 'அட்வைஸ்
ADDED : அக் 26, 2024 08:06 PM
சென்னை:'த.வெ.க., மாநாட்டுக்கு வருபவர்கள், இரு சக்கர வாகனங்களைத் தவிர்க்க வேண்டும்' என, அக்கட்சியின் நிறுவனர் விஜய் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
பெயரைப் போன்றே சில விஷயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும். அப்படித்தான், கடிதங்களில் கூறியதையே, இங்கு மீண்டும் வலியுறுத்தப் போகிறேன். அனைத்து வகைகளிலும் நீங்களும், உங்களது பாதுகாப்பும் எனக்கு முக்கியம்.
எனவே, மாநாட்டு பயணப் பாதுகாப்பில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். இரு சக்கர வாகனப் பயணத்தை தவிர்ப்பது நல்லது. பயணத்தின்போது, பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தாமல் வர வேண்டும்.
போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கான தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாப்பு படையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மாநாடு சார்ந்த போலீசாரின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு, முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். உங்களின் பாதுகாப்பான பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன். நீங்களும் அதை கருத்தில் கொண்டு வர வேண்டும். மாநாட்டில் சந்திப்போம்; மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.