த.வெ.க., மாநாடு: விழா மேடையில் தியாகிகளுக்கு விஜய் மரியாதை
த.வெ.க., மாநாடு: விழா மேடையில் தியாகிகளுக்கு விஜய் மரியாதை
UPDATED : அக் 27, 2024 06:18 PM
ADDED : அக் 27, 2024 03:14 PM
முழு விபரம்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் இன்று நடிகர் விஜயின் த.வெ.க.,வின் அரசியல் மாநாடு கொடி பாடலுடன் துவங்கியது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், கட்சியின் முதல் மாநாட்டை இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்துகிறார். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரகணக்கான தொண்டர்கள் விக்கிரவாண்டியில் கூடியுள்ளனர். முதலில் விழா மேடைக்கு நிர்வாகிகள் வந்தனர்.
மாநாட்டிற்கு விஜயின் பெற்றோர் சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோர் வந்துள்ளனர். அப்போது, மாநாட்டு திடலில் இருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். அவர்களை அமைதி காக்கும்படி அவர்கள் அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 3:00 மணிக்கு மேல் கட்சியின் கொடி பாடலுடன் மாநாடு துவங்கியது. முதலில் பறையாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை 4 மணியளவில் நடிகர் விஜய் மேடைக்கு வந்தார். தொடர்ந்து அங்கிருந்த ரேம்ப்பில் நடந்தும், ஓடிய விஜயை நோக்கி, தொண்டர்கள் கட்சி துண்டுகளை வீசினர். அதில் சிலவற்றை எடுத்து தோளில் எடுத்து அணிந்து கொண்டார். பிறகு, மேடைக்கு வந்ததும், கொள்கை காணொலி வெளியிடப்பட்டது. அதில் மதசார்பற்ற சமூக நீதி கொள்கைகள் என்ற வாசகம் இடம்பெற்று இருந்தது. தொண்டர்களின் வரவேற்பை பார்த்து விஜய் லேசாக கண்கலங்கினார்.
மரியாதை
தொடர்ந்து தமிழகத்தை ஆண்ட அரசர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
இந்த மாநாட்டில் நீட் தேர்வு, ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.