வேங்கைவயலை தொடர்ந்து விக்கிரவாண்டியிலும் ‛‛வக்கிரம்'': கிணற்று நீரில் மலம் கலந்து அட்டூழியம்?
வேங்கைவயலை தொடர்ந்து விக்கிரவாண்டியிலும் ‛‛வக்கிரம்'': கிணற்று நீரில் மலம் கலந்து அட்டூழியம்?
UPDATED : மே 15, 2024 11:41 AM
ADDED : மே 15, 2024 10:53 AM

விழுப்புரம்: வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மனித மலக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் அதிர்வுக்குள்ளான நிலையில், தற்போது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் திறந்தவெளி குடிநீர் கிணற்றில் மர்ம நபர்கள் மலம் கலந்ததாக புகார் எழுந்துள்ளது. நேரில் ஆய்வு செய்த தாசில்தார் யுவராஜ், ''இது மனிதக்கழிவு அல்ல, தேனடை'' எனத் தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன்பு, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுவரை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த சம்பவம் முடிவதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றுமொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. விக்கிரவாண்டி அருகே கே.ஆர்.பாளையம் அடுத்த கஞ்சனூர் கிராமத்தில் பொதுமக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் திறந்தவெளி கிணற்றில் மர்ம நபர்கள் மனித மலக்கழிவுகளை கலந்ததாக புகாரளிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அக்கிணற்று தண்ணீரை பயன்படுத்த அஞ்சுகின்றனர். இது குறித்து கஞ்சனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தாசில்தார் மறுப்பு
இது தொடர்பாக தாசில்தார் யுவராஜ், கிணற்றில் நேரடியாக ஆய்வு செய்தார். அதில், கிணற்று தண்ணீரில் இருந்தது மனிதக் கழிவு அல்ல, தேனடை என்பது தெரியவந்ததாக யுவராஜ் தெரிவித்தார்.

