வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ள தி.மு.க.,:அன்புமணி ஆவேசம்
வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ள தி.மு.க.,:அன்புமணி ஆவேசம்
UPDATED : ஜூன் 30, 2024 06:08 PM
ADDED : ஜூன் 30, 2024 06:06 PM

சென்னை: 'விக்கிரவாண்டி தொகுதியில், பா.ம.க., - அ.தி.மு.க., நிர்வாகிகள் மீது தாக்குதல் நடந்துள்ளதால், தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும், 10 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் விதிமீறல்கள் மற்றும் வன்முறைகளை, தி.மு.க., கட்டவிழ்த்து விட்டுள்ளது.
தி.மு.க., தேர்தல் பணிகளுக்கு, 9 அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக உள்ளனர். அவர்களுக்கு துணையாக மற்ற அமைச்சர்களும், 80க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், ஆயிரக்கணக்கான உள்ளாட்சி பிரதிநிதிகளும், விக்கிரவாண்டியில் குவிந்துள்ளனர். அவர்கள், ஆயிரக்கணக்கான வாகனங்களில் தொகுதியில் வலம் வருகின்றனர். இது அப்பட்டமான விதிமீறல் என்பதால், அவர்கள் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
தி.மு.க., கிளைச்செயலர் கண்ணதாசன், சட்டவிரோதமாக மணல் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதுபற்றி அதிகாரிகளிடம் புகார் செய்த அ.தி.மு.க., கிளைச்செயலர் கந்தனை ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். அதை தட்டிக்கேட்ட பா.ம.க., கிளைத்தலைவர் அண்ணாதுரையும் தாக்கப்பட்டுள்ளார். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை, தேர்தல் அதிகாரியும் வேடிக்கை பார்க்கிறார்; அவரை மாற்றி, வேறு அதிகாரியை நியமித்து தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.