மருத்துவ கண்காணிப்பில் 'வில் அம்பு' பட நடிகர் ஸ்ரீ
மருத்துவ கண்காணிப்பில் 'வில் அம்பு' பட நடிகர் ஸ்ரீ
ADDED : ஏப் 18, 2025 11:40 PM

சென்னை:வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு, மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரீ.
கடைசியாக, இறுகப்பற்று படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில், உடல் மெலிந்த தோற்றத்தில், ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போன நிலையில், தன் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.
அவர், போதைக்கு அடிமையானதாக தகவல்கள் வெளியான நிலையில், நடிகர் ஸ்ரீயின் தற்போதைய நிலை குறித்து, அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
நடிகர் ஸ்ரீ, மருத்துவர்களின் சிகிச்சையில் உள்ளார். தற்போது, அவரது மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றி, சமூக ஊடகங்களில் இருந்து சிறிது ஓய்வு எடுத்து வருகிறார்.
அவர் குணமடைந்து, நல்வாழ்வுக்கு திரும்புவதில் கவனம் செலுத்துவதால், அவரது தனியுரிமையை அனைவரும் மதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஊகங்களும், தவறான தகவல்களும் மிகவும் வருத்தமளிக்கின்றன.
மேலும், அவரது உடல்நிலை பற்றிய வதந்திகள் மற்றும் உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்புவதை தவிர்க்க வேண்டும். சிலரின் நேர்காணல்களில் தெரிவிக்கும் எந்தவொரு கருத்தையும் நாங்கள் ஆதரிக்கவில்லை; அதை முழுமையாக மறுக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

