விளாத்திகுளம் தி.மு.க., - எம்.எல்.ஏ., வெற்றியை எதிர்த்த வழக்கு வாபஸ்
விளாத்திகுளம் தி.மு.க., - எம்.எல்.ஏ., வெற்றியை எதிர்த்த வழக்கு வாபஸ்
ADDED : செப் 22, 2026 09:18 AM

சென்னை: துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் வெற்றி பெற்றதை செல்லாது என, அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு திரும்பப் பெறப்பட்டது.
சட்டசபை தேர்தலில், துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட மார்க்கண்டேயன் வெற்றி பெற்றார்.
அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தொகுதி வாக்காளரான விமலாதேவி என்பவர் மனு தாக்கல் செய்தார்.
மனுவில், 'மார்க்கண்டேயன், தன் மனைவி பெயரில் வாங்கிய சொத்து விபரங்களை வேட்புமனுவில் குறிப்பிடவில்லை. இது, தேர்தல் நடத்தை விதிகளின்படி குற்றமாகும்.
'எனவே, அவரை பதவியில் இருந்து நீக்கக்கோரி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, கவர்னருக்கு அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, கூறியிருந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'மனு விசாரணைக்கு உகந்ததல்ல' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.
உடனே மனுதாரர் தரப்பில், 'வழக்கை திரும்ப பெற்று, தேர்தல் வழக்காக தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்' என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், 'குறிப்பிட்ட காலவரம்பிற்குள் தான் தேர்தல் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்ற நிலை இருக்கும் போது, தேர்தல் வழக்கு தாக்கல் செய்ய எப்படி அனுமதி வழங்க முடியும்? சட்டத்தை வளைக்க பார்க்கிறீர்களா' என, கேள்வி எழுப்பியதுடன், 'கடுமையான அபராதம் விதிக்கப்படும்' என்றும் எச்சரித்தனர்.
மேலும், மனுவை திரும்ப பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
