ADDED : ஜன 01, 2026 01:42 AM

சென்னை: பிரபல கிராமிய பாடகி லட்சுமி அம்மாள், நேற்று முன்தினம் இரவு காலமானார்.
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியை சேர்ந்தவர், கிராமிய பாடகி லட்சுமி அம்மாள், 75. இயக்குநர் அமீர் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில், 2007ம் ஆண்டு வெளியான, பருத்தி வீரன் படத்தில் இடம் பெற்ற, 'ஊரோரம் புளியமரம்…' பாடல் வழியே பிரபலமானார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு முதல், ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டதால், லட்சுமியால் பாட முடியாமல் போனது. வயது முதிர்வு மற்றும் உடல் உபாதை காரணமாக, நேற்று முன்தினம் இரவு காலமானார். இவரது மறைவுக்கு, கிராமியக் கலைஞர்கள், திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆறு படங்களில் மட்டுமே பாடியுள்ளார். ஆனால், 20 வயது முதல் கும்மிப்பாட்டு, ஒப்பாரி, தாலாட்டு, தெம்மாங்கு, பக்தி நாட்டுப்புறப் பாட்டு என, கலக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

