போதை பொருள் கடத்தலை தடுக்க 'வில்லேஜ் விஜிலென்ஸ்' கமிட்டி
போதை பொருள் கடத்தலை தடுக்க 'வில்லேஜ் விஜிலென்ஸ்' கமிட்டி
ADDED : அக் 23, 2025 12:21 AM
சென்னை: போதை பொருள், மது பாட்டில்கள் மற்றும் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுவோரை கண்காணிக்க, மீனவ இளைஞர்களுடன் கை கோர்த்து, கடலோர பாதுகாப்பு குழும போலீசார், 10,504 'வில்லேஜ் விஜிலென்ஸ் கமிட்டி' எனப்படும் கிராம கண்காணிப்பு குழுக்களை அமைத்துள்ளனர்.
தமிழக காவல் துறையின் கீழ் செயல்படும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார், திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரை, 1,076 கி.மீ., துாரத்தில் உள்ள கடலோர பகுதிகளில், தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இந்த ஆண்டில், அக்., 16ம் தேதி வரை, கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டது தொடர்பாக, 118 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். 87 புகார்களுக்கு சி.எஸ்.ஆர்., எனும் ரசீது வழங்கி விசாரித்து வருகின்றனர்.
மேலும், போதைப் பொருள் உள்ளிட்ட கடத்தல் தொழிலை முறியடிக்க, 14 மீனவ கிராம இளைஞர்களுடன் கை கோர்த்து செயல்பட நடவடிக்கை எடுத்துள்ளனர். மீனவ இளைஞர்களுக்கு அடிப்படை பயிற்சி அளித்து, ஓராண்டில் 10,504 கிராம கண்காணிப்பு குழுக்களை உருவாக்கி உள்ளனர்.
இதில் இடம் பெற்றுள்ளவர்கள், கடலோர பாதுகாப்பு குழும போலீசாருடன் இணைந்து, ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'கடத்தல் மற்றும் சட்ட விரோத செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதுடன், நடுக் கடலில் தத்தளிக்கும் மீனவர்களை காப்பாற்றி வருகிறோம்.
அந்த வகையில், 29 மீனவர்கள் மற்றும் ஏழு படகுகளையும் மீட்டுள்ளோம்' என்றனர்.