மரக்காணம் கலவர வழக்கில் பா.ம.க.,வினர் 20 பேர் விடுதலை விழுப்புரம் கோர்ட் தீர்ப்பு
மரக்காணம் கலவர வழக்கில் பா.ம.க.,வினர் 20 பேர் விடுதலை விழுப்புரம் கோர்ட் தீர்ப்பு
ADDED : மார் 29, 2025 06:41 AM
விழுப்புரம்: மரக்காணம் கலவர வழக்கில் கடலுார் பா.ம.க., வினர் 20 பேர் விடுதலை செய்து விழுப்புரம் கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி, வன்னியர் சங்கம் சார்பில் இளைஞர் பெருவிழா மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தினர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லப்புரத்திற்கு வாகனங்களில் சென்றனர்.அப்போது, வழியில் மரக்காணம் பகுதியை சேர்ந்த சிலருக்கும், மாநாட்டிற்கு சென்ற பா.ம.க.,வினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கலவரமாக மாறியது.அதில், அரசு மற்றும் தனியார் பஸ்கள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. சில வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக மரக்காணம் போலீசார், சட்ட விரோதமாக கூடுதல், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், வீடுகளை எரித்தல், வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து, பா.ம.க., கடலுார் மாவட்ட முன்னாள் செயலாளர்கள் கலையரசன், சசிக்குமார், நிர்வாகிகள் ஜெய்சங்கர், சிவக்குமார், சுப்ரமணியன், ஆனந்தன், சங்கர், சுதாகர் உட்பட 20 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு , விழுப்புரம் எஸ்.சி.,-எஸ்.டி., சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. பா.ம.க., தரப்பில் வழக்கறிஞர் மாரிமுத்து ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, அரசு தரப்பில் சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 20 பேரையும் விடுதலை செய்து நேற்று தீர்ப்பளித்தார்.