ADDED : ஜன 25, 2024 07:33 AM

சென்னை: 'விநாயகர் சிலைகளை கரைக்க, முன் கூட்டியே கட்டணம் வசூலிக்க வேண்டும்' என, மாவட்ட கலெக்டர்களுக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
'இயற்கையான நீர்நிலைகளை மாசுபடாமல் பாதுகாக்க, அங்கு விநாயகர் சிலைகளை கரைக்க தடை விதிக்க வேண்டும்' என, சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த ஹரிஹரன் என்பவர், தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், 'ஏரிகள், ஆறுகள், முகத்துவாரங்கள், சதுப்பு நிலங்கள் போன்ற இயற்கையான நீர் நிலைகளில், விநாயகர் சிலைகள் கரைப்பது தவிர்க்கப்பட வேண்டும்' என்று உத்தரவிட்டிருந்தது.
மீண்டும் இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பு:
நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைப்பதில் ஏற்படும் பிரச்னைக்கு தீர்வு காண, தமிழக அரசின் வருவாய், பொது, சுற்றுச்சூழல் துறைகளின் செயலர்கள் இடம்பெற்ற குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்தக் குழு கூட்டத்தை ஆண்டுதோறும், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு, ஆறு மாதங்களுக்கு முன் கூட்ட வேண்டும்.
விநாயகர் சிலைகளை கரைக்க செயற்கையான குளங்களை உருவாக்குதல், பிளாஸ்டர் ஆப் பாரிஸால் சிலைகள் செய்யப்படுவதை தடுத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி கோருவோரிடம் முன்கூட்டியே கட்டணம் வசூலிக்க, கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கட்டணத்தை தீர்ப்பாய குழு தீர்மானிக்கும்.
விநாயகர் சிலைகள் கரைப்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து, மூன்று மாதங்களுக்கு முன், மாவட்ட அதிகாரிகள் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும். சிலைகளை கரைக்க வசூலிக்கப்படும் தொகையை நீர்நிலைகளை பராமரிக்க செலவிடலாம். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.