ADDED : பிப் 24, 2024 02:33 AM
சென்னை:அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான, தேர்தல் விதிமீறல் வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடந்த 2021ல், சட்டசபை தேர்தல் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் தொகுதியில், ராஜகண்ணப்பன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அமைச்சராகவும் ஆனார். தேர்தலின் போது, விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக, பெருநாழி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ததாக, கமுதி போலீஸ் நிலையத்தில் மற்றொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில், இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. இரண்டு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மனுக்கள் தாக்கல் செய்தார்.
மனுக்களை, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். இரண்டு வழக்குகளையும் ரத்து செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.

