இந்திய மாணவர்களுக்கு விசா: தாராளம் காட்டுது அமெரிக்கா
இந்திய மாணவர்களுக்கு விசா: தாராளம் காட்டுது அமெரிக்கா
ADDED : செப் 12, 2024 07:00 AM

சென்னை : அமெரிக்காவில், உயர்கல்வி கற்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு, தாராளமாக விசா வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அமெரிக்க கல்வி, வேலைவாய்ப்பை பல நாட்டு மாணவர்கள் விரும்புகின்றனர். இதற்காக, புகழ்பெற்ற பல்கலைகளில், நவீன படிப்புகளை தேர்வு செய்கின்றனர். ஆனாலும், விண்ணப்பிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் விசா கிடைப்பதில்லை.
இந்நிலையில், அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள், அமெரிக்க சட்டங்களை மதிப்பதுடன், கல்வி, ஆராய்ச்சிகளில் சிறந்து விளங்குவதாக அமெரிக்க உயர்கல்வி துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, தகுதியான இந்திய மாணவர்கள் அனைவருக்கும் விசா வழங்கும்படி, அமெரிக்க அரசு, இந்தியாவில் உள்ள துாதரகங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, துாதரக அதிகாரிகள் கூறியதாவது:
அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில், 25 சதவீதம் பேர் இந்தியர்களாக உள்ளனர். அமெரிக்காவில் படிக்க, இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கை, படிப்படியாக அதிகரித்து வருகிறது.
கடந்த 2021ல், 96,000 மாணவர்கள் விசா வழங்கப்பட்ட நிலையில், 2022ல், 1.33 லட்சம் மாணவர்களுக்கும்; கடந்த ஆண்டு, 1.40 லட்சம் மாணவர்களுக்கும் விசா வழங்கப்பட்டுள்ளது.
இந்திய மாணவர்கள், முழு ஈடுபாட்டுடன் கற்பது, ஆராய்ச்சி செய்வது, படிக்கும்போதே பணி வாய்ப்புகளை் தேடுவதால், பொருளாதாரத்திலும் முன்னேறுகின்றனர். இதனால், இருநாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள இந்தியர்களின் நிலையை, இந்தியாவில் உள்ள மாணவர்களும் உணர்ந்து, அமெரிக்கா செல்ல விரும்பி, துாதரகத்தில் விசாரிப்பதுடன், விசாவுக்கும் விண்ணப்பிக்கின்றனர். அவர்களுக்கு வழிகாட்டும் வகையில், அமெரிக்காவின் சிறந்த பல்கலை நிர்வாகிகளையே இங்கு அழைத்து, நல்ல மாணவர்களை அடையாளம் கண்டு, விசா வழங்கும் வகையில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறோம். இனி, விசா நடைமுறைகள் எளிதாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.