விஸ்கோஸ் நுால் இறக்குமதி: நுாற்பாலைகள் கடும் பாதிப்பு
விஸ்கோஸ் நுால் இறக்குமதி: நுாற்பாலைகள் கடும் பாதிப்பு
ADDED : ஏப் 13, 2025 03:54 AM

திருப்பூர்: சீனாவில் இருந்து விஸ்கோஸ் நுால் இறக்குமதி அதிகரித்துள்ளதால், தமிழக நுாற்பாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஜவுளி உற்பத்தியில் முன்னோடியாக இருக்கும் இந்தியாவுக்கு, பாலியஸ்டர் மற்றும் விஸ்கோஸ் நுால்கள், 'சீனா யார்ன்' என்ற பெயரில் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.
கரூர், பள்ளிபாளையம் உட்பட விஸ்கோஸ் நுால் உற்பத்தி செய்யும் தமிழக நுாற்பாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறியதாவது:
அமெரிக்கா - சீனா வர்த்தகப்போர் சூழல் உருவாகியுள்ளது. சீனா தன் வசம் உள்ள பொருட்களை, மற்ற நாடுகளுக்கு மலிவு விலைக்கு ஏற்றுமதி செய்வது அதிகரித்துள்ளது.
மதிப்பு கூட்டப்பட்ட ஆடை தயாரிப்புக்கான விஸ்கோஸ் நுாலிழை இறக்குமதி அதிகரித்துள்ளதால், தமிழக நுாற்பாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதிகம் பயன்படுத்தும், 30ம் நம்பர் விஸ்கோஸ் நுால், கிலோ 198 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அனைத்து வரிகள் உட்பட, சீன இறக்குமதி விஸ்கோஸ் நுால், கிலோ 185 ரூபாய்க்கு கிடைக்கிறது.
கிலோ, 13 ரூபாய் வித்தியாசத்தில், நுாலிழை இறக்குமதி செய்யப்படுவதால், நுாற்பாலைகள் வேலை இழப்பை சந்தித்து வருகின்றன. இது, ஆரோக்கியமான நிலை அல்ல; உள்நாட்டு தொழிலை பாதுகாக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.