வி.ஐ.டி., பல்கலை கழக பி.டெக்.,நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு
வி.ஐ.டி., பல்கலை கழக பி.டெக்.,நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு
ADDED : மே 08, 2024 10:39 PM
சென்னை:வி.ஐ.டி., பல்கலை கழகத்தில், நடப்பு 2024ம் கல்வியாண்டில், பி.டெக்., பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
இந்த நுழைவுத் தேர்வு, நம் நாட்டில், 125 நகரங்களிலும் மற்றும் துபாய், மஸ்கட், கத்தார், குவைத், சிங்கப்பூர், கோலாலம்பூரிலும் கணினி முறையில் நடைபெற்றது.
தேர்வு முடிவுகளை, https://ugresults.vit.ac.in/viteee, www.vit.ac.in என்ற இணையதளங்கள் வழியாக தெரிந்து கொள்ளலாம்.
வி.ஐ.டி.,யின் நுழைவுத் தேர்வில் முதலிடத்தை ஹரியானாவை சேர்ந்த ரூபிந்தர் சிங், 2ம் இடத்தை ராஜஸ்தானை சேர்ந்த பானு மகேஷ் செக்குரி, மூன்றாம் இடத்தை ஆந்திராவை சேர்ந்த வேதாந்த், நான்காம் இடத்தை அசாமை சேர்ந்த ஆயுசி பெய்த், ஐந்தாம் இடத்தை உத்தர பிரதேசத்தை சேர்ந்த சன்வி சிங்க்.
ஆறாம் இடத்தை மஹாராஷ்டிராவை சேர்ந்த அபிராஜ் ராம்காந்த் யாதவ், ஏழாம் இடத்தை உத்தரகண்டை சேர்ந்த சைதன்யா ரமேஷ் போஷ்ரே, எட்டாம் இடத்தை உத்தரபிரதேசத்தை சேர்ந்த விக்கி குமார் சிங், ஒன்பதாம் இடத்தை ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த சோகன் ஹஸ்ரா, 10ம் இடத்தை பீஹாரை சேர்ந்த சாகிலும் பிடித்தனர்.
வி.ஐ.டி., நடத்திய நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான், மாணவர் சேர்க்கை நடைபெறும். ரேங்க் எடுத்த மாணவ - மாணவியர் வி.ஐ.டி., வேலுார், சென்னை, ஆந்திர பிரதேசம், போபால் ஆகிய நான்கு வளாகங்களில், தங்களுக்கான பாடப்பிரிவுகளை ரேங்க் அடிப்படையில் தேர்வு செய்து கொள்ளலாம்.
இதற்கான நான்கு கட்ட கலந்தாய்வு, ஜூன், 12ம் தேதி வரை நடைபெறுகிறது.வி.ஐ.டி., நுழைவுத் தேர்வில் ஒன்று முதல் 10 ரேங்குக்குள் தகுதி பெறும் மாணவ - மாணவியருக்கு பி.டெக்., படிப்பில் நான்கு ஆண்டுகளும், 100 சதவீத படிப்பு கட்டண சலுகைவழங்கப்படும்.
இதையடுத்து, 500 ரேங்கிற்குள் வருவோருக்கு அதற்கேற்ற வகையிலான கட்டண சலுகை வழங்கப்படும்.
தமிழகம் ஆந்திரா, மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளை சேர்ந்த ஏழை, எளிய குடும்பத்தின் மாணவ - மாணவியரும், வி.ஐ.டி., பல்கலை கழகத்தில் உயர்கல்வி பயில முடியும்.
அதற்கேற்ற வகையில், செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில் பிளஸ் 2 தேர்வில் அரசு பள்ளியில் முதலிடம் பெறும் மாணவ - மாணவியருக்கு, 100 சதவீத படிப்பு கட்டண சலுகையுடன், உணவு மற்றும் விடுதி வசதியுடன் இலவச சேர்க்கை வழங்கப்படுகிறது.