வாந்தி, பேதி: 53 பேருக்கு சிகிச்சை மேயரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
வாந்தி, பேதி: 53 பேருக்கு சிகிச்சை மேயரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
ADDED : ஏப் 22, 2025 05:41 AM
திருச்சி: திருச்சியில் சிறுமி இறப்புக்கு குடிநீர் காரணமல்ல என்று மாநகராட்சி அறிவித்துள்ள நிலையில், அப்பகுதியில் தொடர்ந்து வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட 53 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருச்சி உறையூர் பகுதியில் உள்ள மின்னப்பன் தெரு, பணிக்கன் தெருவில் சில நாட்களாக வாந்தி, பேதியால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதற்கு, அப்பகுதியில் ஒரு வாரமாக வந்த கலங்கலான குடிநீர் தான் என அப்பகுதியினர் குற்றஞ்சாட்டிய நிலையில், நான்கரை வயது பெண் குழந்தை உட்பட மூவர் இறந்தனர்.
இதில், இரு பெண்கள் உடல்நலக்குறைவால் இறந்ததாக கூறப்படுகிறது. பெண் குழந்தை இறந்தது குடிநீரால் என்று குற்றச்சாட்டு பலமாக எழுந்ததால், குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அப்பகுதியில் தண்ணீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு, சோதனைக்கு அனுப்பப்பட்டன.
நேற்று முன்தினம், அப்பகுதிக்கு ஆய்வுக்கு சென்ற மேயர் அன்பழகனை முற்றுகையிட்டு, அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், குடிநீர் சோதனையில், குடிநீரால் குழந்தை இறக்கவில்லை. அது குடிப்பதற்கு உகந்த தண்ணீர் தான் என்று முடிவு வந்துள்ளதாக, நேற்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும், அப்பகுதியில் நேற்று முன்தினம் வரை, வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்ட 53 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீரில் கலப்படம் இல்லை என்று மாநகராட்சி அறிவித்ததை, பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் ஏற்க மறுத்து, கொதிப்படைந்துள்ளனர்.
வாந்தி, பேதியால் இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட காரணம், அங்கு நடந்த குழுமாயியம்மன் கோவில் திருவிழாவில் நீர்மோர் உட்பட பானங்கள் வாங்கி குடித்ததே என்றும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, அப்பகுதியினரை மேலும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.