வாக்காளர் விண்ணப்ப படிவம்; சமர்ப்பிக்க மேலும் 3 நாள் அவகாசம்
வாக்காளர் விண்ணப்ப படிவம்; சமர்ப்பிக்க மேலும் 3 நாள் அவகாசம்
ADDED : டிச 12, 2025 05:13 AM

சென்னை: தமிழகத்தில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், கணக்கெடுப்பு படிவங்களை ஒப்படைக்க, வரும் 14ம் தேதி வரை, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு தேதி மாற்றப்பட்டுள்ளது.
தமிழகம் முழுதும், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி, கடந்த மாதம் துவங்கியது.
முதல் கட்டமாக, வீடு தோறும் வாக்காளர் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இப்பணி டிச.,4ல் முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின், டிச.,11 வரை அவகாசம் வழங்கப்பட்டது.
மாநிலத்தில், 6 கோடியே 41 லட்சத்து 14,587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 6 கோடியே 41 லட்சத்து 10,380 பேருக்கு, விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களில், 6 கோடியே 40 லட்சத்து 83,413 விண்ணப்பங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.
இந்நிலையில், எஸ்.ஐ.ஆர்., பணிகள் நடக்கும் ஐந்து மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் கணக்கெடுப்புக்கான கால அவகாசத்தை தேர்தல் கமிஷன் நீட்டித்துள்ளது.
இதன்படி தமிழகத்தில், பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை நாளை மறுநாள் வரை ஒப்படைக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வரும் 16ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த, வரைவு வாக்காளர் பட்டியல், வரும் 19ம் தேதி வெளியிடப்படும் என, தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.
குஜராத்திலும், கால அவகாசம் நாளை மறுநாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களிலும், அந்தமான் - நிக்கோபர் யூனியன் பிரதேசத்திலும் வரும் 18ம் தேதி வரை கணக்கெடுப்பு படிவங்களை ஒப்படைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் வரும் 26ம் தேதி வரை எஸ்.ஐ.ஆர்., பணி நீட்டிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில், வரும் 18ம் தேதி வரை பணிகளை நீட்டித்து தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
ராஜஸ்தான், மேற்கு வங்கம், கோவா மாநிலங்களிலும் புதுச்சேரி, லட்சத்தீவு யூனியன் பிரதேசங்களிலும், கால நீட்டிப்பு வழங்காத நிலையில் நேற்றுடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி முடிவடைந்தது.

