ADDED : மார் 15, 2024 12:50 AM
சென்னை:எட்டு ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வு வழங்காததைக் கண்டித்து, லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க விரும்பாத நிலையில், வாக்காளர் அடையாள அட்டைகள் ஒப்படைப்பு போராட்டத்தை வரும், 18ம் தேதி நடத்த, அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கம் தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து, சங்கத்தின் மாநில தலைவர் கதிரேசன் நேற்று கூறியதாவது:
அரசு போக்குவரத்துக் கழகங்களில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி, 92 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓய்வூதியர்களாக இருக்கிறோம். கடந்த 2015 நவம்பர் முதல் தற்போது வரை அகவிலைப்படி உயர்வு இல்லாமல், குறைவான ஓய்வூதியமே பெற்று மிக வறுமையில் வாழ்ந்து வருகிறோம்.
வழக்குகள் தொடுக்கப்பட்டதில் நீதிபதிகள், அகவிலைப்படி உயர்வினை வழங்க தீர்ப்புகள் அளித்தனர். ஆனாலும், இன்னும் அகவிலைப்படி உயர்வு வழங்காமல், அரசும் நிர்வாகமும், மேல்முறையீடு செய்து காலம் தாழ்த்தி வருகின்றன.
எனவே, வரும் லோக்சபா தேர்தலில், ஓட்டளிக்க விரும்பாத நிலையில், எங்களின் வாக்காளர் அடையாள அட்டைகளை, வரும் 18ம் தேதி தமிழகம் முழுதும் மாவட்ட கலெக்டர்களிடம் ஒப்படைக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

