ADDED : மார் 14, 2024 02:42 AM
மதுரை:வ.உ.சி., நினைவாக, கோவை சிறையிலுள்ள செக்கை ஓட்டப்பிடாரத்திலுள்ள அவரின் நினைவு இல்லத்திற்கு மாற்ற, தாக்கலான வழக்கில் தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.
துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் குமரன் தாக்கல் செய்த பொதுநல மனு:
வ.உ.சிதம்பரனார் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக பேசியதற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு எண்ணெய் ஆட்டுவதற்கு செக்கில் காளைகளை பூட்டுவதற்கு பதிலாக இவரை இழுக்க வைத்து கொடுமைப்படுத்தினர்.
கோவை மத்திய சிறையில் அந்த செக்கு இன்றும் உள்ளது. அவரது தியாகத்தை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள பாதுகாப்பது நம் கடமை. செக்கை ஓட்டப்பிடாரத்திலுள்ள வ.உ.சி., நினைவு இல்லத்திற்கு மாற்றக்கோரி அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு நேற்று தமிழக தலைமைச் செயலர், துாத்துக்குடி கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி, விசாரணையை 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

