அம்பானி, அதானிக்காகவே வக்ப் சட்டத்திருத்தம்: தவ்ஹீத் ஜமாத்
அம்பானி, அதானிக்காகவே வக்ப் சட்டத்திருத்தம்: தவ்ஹீத் ஜமாத்
ADDED : ஏப் 13, 2025 02:56 AM

சென்னை: வக்ப் திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில், சென்னையில் நேற்று, கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னை சைதாப்பேட்டை, கருணாநிதி வளைவு அருகே நடந்த போராட்டத்தில், இந்த அமைப்பைச் சேர்ந்த, 3,000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
பின், அந்த அமைப்பின் மாநில தலைவர் அப்துல் கரீம் அளித்த பேட்டி:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ப் திருத்த சட்டம், முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது.
வக்ப் சொத்துக்கள் என்பது, முஸ்லிம் முன்னோர்களால் மசூதிகள், கல்வி நிறுவனங்கள் அமைக்க தானம் செய்யப்பட்டவை.
அந்த நிலத்திற்கு உரிமையாளர்கள் கிடையாது; இறைவனே அவற்றின் உரிமையாளர். புதிய சட்டம் எனக்கூறி, எங்களது உரிமையை மத்திய அரசு பறிக்கிறது.
அதேபோல், ஆவணங்கள் இல்லாத மசூதிகளுடைய சொத்துக்கள் செல்லாது என, மத்திய அரசு கூறுகிறது. இதன் வாயிலாக, நாடு முழுதும் ஆவணமில்லாமல் செயல்படும் ஆயிரக்ககணக்கான மசூதிகளின் சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
வக்ப் சொத்துக்களை பாதுகாக்கவே, இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளதாக, பிரதமர் கூறுகிறார்.
அப்படியென்றால், பாபர் மசூதி நிலத்தை திரும்ப முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
அதேபோல், மஹாராஷ்டிராவில் வக்ப் நிலத்தில் கட்டப்பட்டுள்ள அம்பானியின் வீட்டை இடித்து, அந்த நிலத்தை வக்ப் நிர்வாகத்திடமே ஒப்படைக்க வேண்டும். தொழிலதிபர்கள் அம்பானி, அதானி போன்றவர்கள் பயனடையவே, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது.
அதேபோல், அம்பானி, அதானி வகையறாவுக்கு, வக்ப் சொத்துக்களை கூறுபோட்டு கொடுக்கவே, மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

