போர் பாதுகாப்பு ஒத்திகை முக்கிய இடங்களில் தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு
போர் பாதுகாப்பு ஒத்திகை முக்கிய இடங்களில் தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு
ADDED : மே 12, 2025 03:46 AM

சென்னை: 'தமிழகத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை முக்கிய இடங்களில் தொடர்ந்து நடக்கும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சக ஆலோசனையின்படி, தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள், அணுமின் நிலையங்கள், விமான நிலையங்கள், அனல்மின் நிலையங்கள் போன்றவற்றில், சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் போர் பாதுகாப்பு ஒத்திகை, கடந்த, 7ம் தேதி முதல் நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் துாத்துக்குடி துறைமுகம், அனல்மின் நிலையம் போன்றவற்றில், விமான தாக்குதலை எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பயிற்சி நடந்தது.
ஒத்திகையின் போது பாதுகாப்பு, வெளியேற்றம், முதலுதவி தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. எனினும், தமிழகத்தில் முக்கிய இடங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில், அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடத்தப்படும்.
வாரத்தின் இரண்டாம் பாதியில், சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் மாவட்ட கலெக்டர்களால், தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் ஒத்திகை பயிற்சி நேரடியாக நடத்தப்படும்.
இந்த ஒத்திகை பயிற்சியை, மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் ஒருங்கிணைந்து நடத்தும்.
இப்பயிற்சி, முக்கிய இடங்களில் ஆயத்த நிலையை சரிபார்த்துக் கொள்வதற்கான ஒத்திகை மட்டுமே. மற்ற இடங்களில் அனைத்து செயல்பாடுகளும் வழக்கம் போல இயங்கும்.
இப்பயிற்சி குறித்து, பொதுமக்கள் எவ்வித பதற்றமோ, அச்சமோ கொள்ள தேவையில்லை என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.