ADDED : பிப் 20, 2026 03:24 AM

சென்னை: 'வீடு வீடாக சென்று இடியாப்பம் விற்பனை செய்வோர், கட்டாயம், உணவு பாதுகாப்புக்கான பதிவு உரிமம் பெற்றிருக்க வேண்டும்' என, உணவு பாதுகாப்பு துறை மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில், ஏராளமானோர் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று, இடியாப்பம் விற்பனை செய்து வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் சென்று, இடியாப்பம், வடகறி ஆகியவற்றை விற்கின்றனர். அவற்றின் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
எனவே, இடியாப்ப விற்பனையை ஒழுங்குபடுத்த, தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:
இடியாப்பம் விற்பனை செய்வோர், கட்டாயம் பதிவு உரிமம் பெற வேண்டும் என, ஏற்கனவே அறிவித்து இருந்தோம். அதை பின்பற்றி, சிலர் பதிவு உரிமம் பெற்றனர். பெரும்பாலானோர் பதிவு உரிமம் பெறாமல் உள்ளனர். சோதனையில் அவர்கள் கண்டறியப்பட்டால், அபராதம் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இதை தவிர்க்க, https://foscos.fssai.gov.in/public/fbo/open-eligibility/N என்ற இணையதளத்தில், எவ்வித கட்டணமும் இல்லாமல், பதிவு செய்யலாம். ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிப்பது அவசியம்.
விற்பனையாளர்கள் இ-சேவை மையங்கள் வழியாக, அல்லது தாங்களாகவே பதிவு செய்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

