எச்சரிக்கை! 25 தமிழக மாவட்டங்களில் கனமழை... இன்று முதல் 3 நாட்கள் புரட்டிப்போடும்
எச்சரிக்கை! 25 தமிழக மாவட்டங்களில் கனமழை... இன்று முதல் 3 நாட்கள் புரட்டிப்போடும்
ADDED : அக் 13, 2024 01:05 AM

சென்னை: வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில், அடுத்தடுத்து உருவாகும் வளி மண்டல சுழற்சிகளால், தமிழகத்தில், 25 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு மழை புரட்டி போடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அந்த மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அங்கேயே தொடர்கிறது.
இன்று அது வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய அரபிக்கடல் பகுதியில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையலாம்.
கீழடுக்கு சுழற்சி
இந்தச் சூழலில், தென்தமிழகம் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில், தனித்தனி வளி மண்டல கீழடுக்கு சுழற்சிகள் காணப்படுகின்றன. அரபிக்கடல் நிகழ்வு காரணமாக, இந்த சுழற்சிகள் மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளன.
அதேநேரத்தில், இந்திய பெருங்கடலில் பூமத்திய ரேகை பகுதி, தென்கிழக்கு வங்கக்கடல் இணையும் பகுதியிலும், வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் தாக்கத்தில், நாளை இங்கு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதற்கான சூழல் நிலவுகிறது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில், தென்மேற்கு பருவக்காற்று விலகி வரும் சூழலில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வலுவடைவது, வடகிழக்கு பருவ மழையின் துவக்கமாக அமைய அதிக வாய்ப்புகள் உள்ளன.
இப்பின்னணியில், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள், புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இது, 15ம் தேதி வரை நீடிக்கும்.
இன்று கன மழை
திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம்.
நாளை மழை கொட்டும்
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலுார், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி.
15ல் கன மழை
கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை
'ஆரஞ்ச் அலர்ட்'
நாளை விழுப்புரம், கடலுார் மாவட்டங்களுக்கும், 15ல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும் மிக கனமழைக்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த சமயத்தில், 11 முதல், 20 செ.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோர பகுதிகளில், 16ம் தேதி வரை மணிக்கு, 35 முதல், 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.