ஒருநாள் முன்பே சுதந்திர தின விழா தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
ஒருநாள் முன்பே சுதந்திர தின விழா தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
ADDED : ஆக 16, 2025 01:33 AM

தமிழகம் முழுதும் பல்வேறு தனியார் பள்ளிகள், சுதந்திர தின விழாவை ஒருநாள் முன்னதாகவே கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளிகளில் ஆண்டுதோறும் ஆக. 15ல் சுதந்திர தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு ஆக. 15 வெள்ளிக்கிழமை என்பதால், சனி, ஞாயிறு என அடுத்தடுத்து தொடர் விடுமுறை நாளானது.
இதனால், தமிழகம் முழுதும் பல்வேறு தனியார் பள்ளிகளில், ஒரு நாள் முன்னதாகவே, அதாவது ஆக. 14 வியாழக்கிழமையே சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தொடர் விடுமுறை, பள்ளி வாகனங்கள் ஒருநாள் இயக்குவதை தவிர்த்தல், மாணவ - மாணவியர், ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல் விடுமுறை நாளை முழுமையாக பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளிட்டவை, ஒருநாள் முன்னதாக சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டதற்கான காரணங்களாக கூறப்படுகின்றன.
ஆனால், இதற்கு சமூக ஆர்வலர்கள், தேசப்பற்றாளர்கள் மட்டுமின்றி, பெற்றோர், பொதுமக்கள் தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
திருப்பூரை சேர்ந்த தேசிய சிந்தனை பேரவை நிர்வாகிகள் கூறுகையில், 'ஒருநாள் முன்னதாக சுதந்திர தின விழாவை, கல்வி நிறுவனங்கள் கொண்டாடுவது தவறான முன்னுதாரணம்; தேசப்பற்று, சுதந்திரத்திற்காக உழைத்த தியாகிகளின் பெருமைகள் உள்ளிட்டவற்றை மாணவர்களிடம் எடுத்துச்சொல்வதற்கு சிறந்த தினம், சுதந்திர திருநாள்தான்.
'தற்போது சமூக வலைதளங்களில் குழந்தைகள் கூட மூழ்கி கிடக்கின்றனர்.
தேசத்தின் அருமை அவர்களுக்கு புரிவதில்லை. இதை உணர்த்த, பள்ளி நிர்வாகங்களுக்கு கிடைத்த வாய்ப்பை, பள்ளிகள் வீணடித்துவிடக்கூடாது. ஆக. 14ம் தேதி பாகிஸ்தான் சுதந்திர தினத்தை கொண்டாடுவது போல் ஆகிவிடும். பள்ளி, கல்லுாரிகளில், சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, அந்தந்த தேதிகளில், நாட்டு மக்களுடன் இணைந்து கொண்டாடப்பட வேண்டும்' என்றனர்.
திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரேவிடம் கேட்டபோது, ''நாட்டின் சுதந்திர தின விழாவை, ஆக. 15 அன்றும், குடியரசு தின விழாவை ஜன. 26 அன்று மட்டுமே கொண்டாட வேண்டும்; இல்லாவிடில் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும். இதுகுறித்து, பள்ளி, கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தப்படும்,'' என்றார்.
- நமது நிருபர் -