நோயாளிகளை தொந்தரவு செய்யாதீர் போராடும் நர்ஸ்களுக்கு எச்சரிக்கை
நோயாளிகளை தொந்தரவு செய்யாதீர் போராடும் நர்ஸ்களுக்கு எச்சரிக்கை
ADDED : செப் 26, 2025 08:22 PM
சென்னை:'அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கு தொந்தரவு செய்யும் வகையில் நர்ஸ்கள் நடந்து கொண்டால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் எச்சரித்துள்ளது.
தமிழக அரசு மருத்துவ துறையில், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் நர்ஸ்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, மருத்துவமனைகளில் மக்கள் சந்திப்பு முறையீடு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் வாயிலாக, உள்நோயாளிகள் பிரிவில், நோயாளிகள் மற்றும் உறவினர்களிடம், நர்ஸ்கள் தங்கள் குறைகளை கூறி வருகின்றனர். இதை போலீசார் தடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:
நர்ஸ்கள் தங்கள் கோரிக்கைகளை யாருக்கும் தொந்தரவு இல்லாமல், போலீசார் அனுமதி பெற்று, போராட்டத்தின் வாயிலாக தெரிவிக்கலாம்.
அதை தவிர்த்து, நோய் பாதிப்புக்குள்ளான நோயாளிகள், அவர்களுடன் மனவேதனையில் இருக்கும் உறவினர்களிடம், தங்கள் குறைகளை கூறுகிறோம் என அவர்களை தொந்தரவு செய்யக் கூடாது.
அவ்வாறு தொந்தரவு செய்யும் நர்ஸ்கள் மீது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவை, அவர்களின் பணி நிரந்தர வாய்ப்பையும் பாதிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

