கோவை சிறை காவலர்களால் தாக்கப்பட்டாரா சவுக்கு சங்கர்?
கோவை சிறை காவலர்களால் தாக்கப்பட்டாரா சவுக்கு சங்கர்?
UPDATED : மே 08, 2024 10:31 AM
ADDED : மே 08, 2024 03:19 AM

சென்னை: 'சிறை காவலர்களால் சவுக்கு சங்கர் தாக்கப்படவில்லை' என, சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் கூறியுள்ளார்.
போலீஸ் அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் பற்றி தரக்குறைவாக பேசி, அவதுாறு பரப்பியதால், பிரபல, ' யு டியூபர்' சவுக்கு சங்கர் கைதாகி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
'நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ள சங்கரை, மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான தனிப்பிரிவில் அடைத்துள்ளனர். சிறையில் அடைக்கும் முன் அவரது உடலில் எவ்வித பாதிப்பும் இல்லை. தற்போது, அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது' என, அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார். அதை மறுத்துள்ள சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள், 'சிறையில் அவரை யாரும் தாக்கவில்லை' என்று கூறியுள்ளார்.
சென்னையிலும் வழக்கு
இதனிடையே, பெண் பத்திரிகையாளர் அளித்த புகாரின் அடிப்படையில், சவுக்கு சங்கர் மீது ஐபிசி 294(பி) ,354(டி), 506(ஐ), 509 மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்சியை சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார், சவுக்கு சங்கர் மீது, ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை இழிவுப்படுத்துதல், தகவல் தொழில் நுட்ப சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய, ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சேலத்திலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கண்டனம்
இதற்கிடையில், 'கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என, நீதிபதி ஒருவரை நியமித்து விசாரணை நடத்த வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். அவர் கூறியுள்ளதாவது:
பத்திரிகை சுதந்திரம் என, மூச்சுக்கு முந்நுாறு தடவை வாய்சவடால் விடும் தி.மு.க., அரசில், பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது சர்வ சாதாரணமாகி விட்டது. பெண்களை இழிவாகப் பேசிய, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட பல தி.மு.க.,வினர் மீது, அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், அவர்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர்.
சட்ட நடவடிக்கைகளும், நீதியும், அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். சட்டத்தை காவல் துறையே கையில் எடுப்பதை, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவரும் ஏற்க மாட்டார்கள். இத்தகைய தாக்குதல்கள் தவறான முன்னுதாரணமாகி விடும். எனவே, கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று, நீதிபதி ஒருவர் வழியாக விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

