தாமிரபரணியில் கழிவு நீர் கலப்பு; மாநகராட்சி அதிகாரிகளை விளாசிய ஐகோர்ட் நீதிபதிகள்!
தாமிரபரணியில் கழிவு நீர் கலப்பு; மாநகராட்சி அதிகாரிகளை விளாசிய ஐகோர்ட் நீதிபதிகள்!
ADDED : நவ 10, 2024 11:34 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றில் ஆய்வு மேற்கொண்ட ஐகோர்ட் நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் மாநகராட்சி அதிகாரிகளை வார்த்தைகளால் விளாசினர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக தாமிரபரணி ஆறு இருந்து வருகிறது. இந்த ஆற்றில் கழிவுநீர் கலப்பதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. கழிவு நீர் கலப்பதை தடுப்பதில் மாநகராட்சி அலட்சியமாக இருப்பதாகவும் புகார் இருக்கும் நிலையில், தாங்களே நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர்.
அதன்படி, திருநெல்வேலி கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றில் ஐகோர்ட் நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அவர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடன் இருந்தனர். ஆய்விற்கு பின்பு முக்கிய உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பிக்க வாய்ப்புள்ளது.
அதிகாரிகளிடம் நீதிபதிகள் , 'தாமிரபரணி ஆற்றில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்க இரண்டு வருடம் அவகாசம் வேண்டும், என்று கேட்கிறீர்கள் ஏன்? உடனே தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்ய முடியாதா? கழிவு நீர் கலக்காமல் தடுக்க முடியாதா?
நாங்கள் வருகிறோம் என்று திடீரென்று சுத்தப்படுத்தி இருக்கிறீர்கள், நாங்கள் ஆய்வு செய்ய வர மாட்டோம் என்று நினைத்தீர்களா? இனி தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்காமல் இருப்பதற்கு என்ன திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்? என சரமாரி கேள்வி எழுப்பினர்.