அணைகளில் நீர்மட்டம் சரிவு மின் உற்பத்தியில் சிக்கல்
அணைகளில் நீர்மட்டம் சரிவு மின் உற்பத்தியில் சிக்கல்
UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 09:15 PM
ஊட்டி: நீலகிரி அணைகளில் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருவதால், மின் உற்பத்தி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குந்தா, பைக்காரா நீர்மின் திட்டத்தின் கீழ், 12 மின் நிலையங்கள் உள்ளன. இங்குள்ள, 32 பிரிவுகளின் வாயிலாக, 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளும் திறன் உள்ளது.
அப்பர்பவானி, குந்தா, கெத்தை, எமரால்டு, அவலாஞ்சி பைக்காரா உள்ளிட்ட, 13 அணைகள், 30க்கும் மேற்பட்ட தடுப்பணைகளில் தேக்கி வைக்கப்படும் நீர் வாயிலாக மின் உற்பத்தி நடந்து வருகிறது.
நடப்பாண்டு, பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால், அணையில் இருப்பில் இருந்த தண்ணீர் படிப்படியாக மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டது. தற்போது, அணைகளில், 35 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருப்பில் உள்ளது.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘நடப்பாண்டு கோடை, தென் மேற்கு பருவமழை பொய்த்த நிலையில், அணைகளில் நீர்மட்டம் படிப்படியாக குறைந்துள்ளது. தண்ணீர் இல்லாததால், தினசரி மெகாவாட், 200 ஆக குறைந்துள்ளது.
அணையில் உள்ள தண்ணீர் இன்னும், ஒரு மாதத்திற்கு தாக்குப்பிடிக்கலாம். வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்துள்ளோம்,’ என்றனர்.
