தாமிரபரணியில் ஒரு லட்சம் கன அடி நீர் வரும் வாய்ப்பு; மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
தாமிரபரணியில் ஒரு லட்சம் கன அடி நீர் வரும் வாய்ப்பு; மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
UPDATED : டிச 13, 2024 02:41 PM
ADDED : டிச 13, 2024 06:32 AM

திருநெல்வேலி: தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கனமழை தொடர்ந்தால், ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. தென்காசி, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.
திருநெல்வேலி டவுனில் பெய்த கனமழை காரணமாக பெருக்கெடுத்த வெள்ளம், முகமது அலி தெரு, கே.டி.சி., நகர் கீழநத்தம் பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்தது. திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தாமிரபரணியில் 1500 கன அடி நீர் மட்டுமே திறக்கப்படுகிறது.
தென்காசி மாவட்டம் ராமநதி, கடனாநதி ஆறுகள் மூலம் தாமிரபரணிக்கு அதிக நீர் வருகிறது. இதனால் தாமிரபரணியில் சுத்தமல்லி அணைக்கட்டுக்கு சுமார் 41,000 கன அடி நீர் வருகிறது. இந்த நீரின் அளவு அபாய கட்டத்தை எட்டவில்லை. இருப்பினும் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தாமிரபரணி ஆற்றில் தற்போது வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடரும் பட்சத்தில், வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக நீர் வரத்து அதிகரிக்கும்; தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகும் வாய்ப்புள்ளது. எனவே தாமிரபரணி மற்றும் அதன் கிளை ஆறுகளின் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், முகாம்களுக்கு செல்லவும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.