பதவி உயர்வுக்காக 24 ஆண்டாக காத்திருப்பு நீர்வளத்துறையினர் தொடர்ந்து ஏமாற்றம்
பதவி உயர்வுக்காக 24 ஆண்டாக காத்திருப்பு நீர்வளத்துறையினர் தொடர்ந்து ஏமாற்றம்
ADDED : டிச 13, 2024 10:25 PM
சென்னை:பதவி உயர்வுக்காக, 24 ஆண்டுகளாக காத்திருக்கும் நீர்வளத்துறையினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தி.மு.க., அரசு, 2021ல் பொறுப்பேற்றதும், பொதுப்பணி துறையில் இருந்து நீர்வளத்துறை தனியாக பிரிக்கப்பட்டது. இரண்டு துறைகளுக்கும் தனி அமைச்சர்கள், செயலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
காத்திருப்பு
ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு பணிமாறுதல் பெறுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி, தங்களுக்கு விருப்பமான துறைக்கு பணியிடத்தை பலரும் மாற்றிக் கொண்டனர். பொதுப்பணி துறையில் இருந்து கட்டாயத்தின் அடிப்படையிலும், நீர்வளத்துறைக்கு பலர் மாற்றப்பட்டனர்.
இதனால், பொதுப்பணி துறையில் காலி பணியிடங்கள் அதிகளவில் உருவாகின. அவற்றை நிரப்புவதற்கு பதவி உயர்வு பட்டியல் உடனுக்குடன் தயாரிக்கப்பட்டது.
அயல்பணி அடிப்படையில், பல்வேறு துறைகளில் பணியாற்றுவதற்கான தலைமை பொறியாளர் பணியிடங்களும் பொதுப்பணி துறையில் அதிகளவில் உருவாக்கப்பட்டுள்ளன.
இதனால், நீர்வளத்துறையில் தலைமை பொறியாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது.
பொதுப்பணி துறையில் உதவி பொறியாளர்களாக இருந்த பலர் உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், தலைமை பொறியாளர் பதவிகளை முறையாக பெற்றனர்.
ஆனால், நீர்வளத்துறையில், 2000ம் ஆண்டு உதவி பொறியாளர்களாக சேர்ந்தவர்களுக்கு உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வு இன்னும் கிடைக்கவில்லை. பல ஆண்டுகளாக பதவி உயர்வுக்கு காத்திருக்கின்றனர்.
பொதுப்பணி துறையில் எல்லாமே முறைப்படி நடக்கும் போது, நீர்வளத்துறையில் மட்டும் அது நடப்பதில்லை என்பதால், உயர் நீதிமன்றத்தில் பொறியாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
அதிருப்தி
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுப்பணி துறையில், 2007ல் சேர்ந்த உதவி செயற்பொறியாளர்கள், 35 பேருக்கு, தகுதி அடிப்படையில் செயற்பொறியாளர் பதவி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
நீர்வளத்துறையில், 24 ஆண்டுகளாக பதவி உயர்வு பெறாத நிலையில், பொதுப்பணி துறையில் இரண்டாவது முறையாக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதால், நீர்வளத்துறையினர் அதிருப்தியில் உள்ளனர்.