தடுப்பணைகள், அணைக்கட்டுகள் கட்ட ரூ.1,321 கோடி கேட்கிறது நீர்வளத்துறை
தடுப்பணைகள், அணைக்கட்டுகள் கட்ட ரூ.1,321 கோடி கேட்கிறது நீர்வளத்துறை
UPDATED : ஆக 08, 2025 01:19 AM
ADDED : ஆக 07, 2025 11:31 PM

சென்னை:சட்டசபையில் அறிவிக்கப் பட்ட 254 திட்டங்களை செயல்படுத்த, அரசிடம் 1,321 கோடி ரூபாயை நீர்வளத்துறை கேட்டுள்ளது.
'நீர்வளத்தை பாதுகாத்து மேம்படுத்தும் வகையில், நடப்பு நிதியாண்டில் ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாடு திட்டம், 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்' என, தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நீர்வளத்துறை வாயிலாக, 317 திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நிதித் துறையிடம் வழங்கப்பட்டது. நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன் தலைமையிலான உயர்மட்டக்குழு , இத்திட்டங்களை ஆய்வு செய்தது. அதில், 254 திட்டப் பணிகளை மேற்கொள்ள, 1,321 கோடி ரூபாய் வழங்க, நிர்வாக ஒப்புதல் கிடைத்து உள்ளது.
அதன்படி, கடலுார் பண்ருட்டியில் கெடிலம் ஆறு, பெண்ணையாறு, தர்மபுரி பென்னாகரத்தில் நாகவதி ஆறு, திருப்பத்துார் ஆம்பூரில் பாலாறு, திருச்சி மண்ணச்சநல்லுார் சண்முகா நதி, தஞ்சாவூர் பேராவூரணி பொன்னைகுத்தியாறு உள்ளிட்ட 15 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட உள்ளன.
திருப்பத்துார், துாத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் அணைக்கட்டுகள் கட்டப்பட உள்ளன. தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், சிவகங்கை, மதுரை, ஈரோடு மாவட்டங்களில் நீர்வளத்தை காக்க, 'ரெகுலேட்டர்'கள் கட்டப்பட உள்ளன.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அடுத்த மருதம்பள்ளம் கிராமத்தில் கடல்நீர் ஊடுருவலை தடுக்க, கடைமடையில் ரெகுலேட்டர் கட்டப்பட உள்ளது.
அத்துடன் பல இடங்களில், பழைய நீர்வழித்தட கட்டமைப்புகள் புனரமைக்கப்பட உள்ளன. இவை உள்ளிட்ட 254 பணிகளை மேற்கொள்ள, 1,321 கோடி ரூபாய் வழங்கும்படி, நிதித் துறையிடம் நீர்வளத் துறை கேட்டுள்ளது.