சட்டசபையில் டங்கு புங்குணு ஆடுராறே நீர்வளத்துறை அமைச்சர்; இ.பி.எஸ், கிண்டல்
சட்டசபையில் டங்கு புங்குணு ஆடுராறே நீர்வளத்துறை அமைச்சர்; இ.பி.எஸ், கிண்டல்
ADDED : டிச 09, 2024 01:54 PM

சென்னை: டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ஆரம்பத்திலேயே தி.மு.க., அரசு எதிர்த்திருந்தால், இந்த நிலைமை வந்திருக்காது என்று இ.பி.எஸ்., கூறினார்.
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்திற்கு அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தை ஆரம்ப நிலையிலேயே எதிர்த்திருந்ததால், இந்த பிரச்னை வந்திருக்காது என்று எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., சட்டசபையில் கூறினார்.
தொடர்ந்து, அவைக்கு வெளியே அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மக்களுடைய போராட்டத்தை சமாதனப்படுத்தும் நோக்கத்தில் தான், முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். கடந்த 10 மாதமாக இந்த சுரங்கத் திட்டத்தை ஏன் எதிர்க்கவில்லை என்று மத்திய கனிமவளத்துறை அமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ளார்.
ஆரம்ப காலத்திலேயே டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை கோரும் போதே, இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியிருந்தால், இந்தப் பிரச்னையே வந்திருக்காது. முதல்வர் பிரதமர் மோடியை 2 முறை சந்தித்து பேசியுள்ளார். அப்போதாவது, இதைப்பற்றி பேசி, இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்தி இருக்கலாம்.
அலட்சியமாக அரசு செயல்பட்டுள்ளது. இதனை எடுத்துச் சொன்னால், கோபப்படுகிறார்கள். தமிழக மக்கள் பாதிக்கும் எந்த திட்டங்களையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அது எங்கள் நிலைப்பாடு.
மக்களின் நலன் கருதி, இந்தத் தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கின்றோம். கனிமவளங்களை வெட்டி எடுக்க மத்திய அரசு அனுமதி பெற வேண்டும் என்று 2023ல் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரும் போது ஏன் எதிர்க்கவில்லை?
தற்போது, அந்த வாய்ப்பை தவற விட்டு விட்டார்கள். கனிமவள சட்டத்திருத்த மசோதாவை தி.மு.க., எதிர்க்கவில்லை என்றே சொல்லப்படுகிறது. காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்தக் கோரி, பார்லிமென்ட்டை அ.தி.மு.க., எம்.பி.,க்கள் முடக்கினர். அதுபோன்று செய்திருக்க வேண்டும்.
நானும் பல முறை பேசிவிட்டேன். எங்களைப் பேச விடமாட்டீங்கறாங்களே! எழுந்து எழுந்து டங்கு புங்குணு ஆட்டம் போடுறாரே நீர்வளத்துறை அமைச்சர். 'டிவி'யில் நீங்க பார்த்திருப்பீங்களே! அவங்க பேசுவதை முழுசா காட்டுவாங்க. நாங்க பேசுவதை எடிட் பண்ணிடுவாங்க. அவர்கள் செய்த தவறை மறைப்பதற்கு பல்வேறு நாடகங்களை அரங்கேற்றுகின்றனர், எனக் குறிப்பிட்டுள்ளார்.