UPDATED : டிச 03, 2024 02:54 AM
ADDED : டிச 03, 2024 12:35 AM

சென்னை: வடகிழக்கு பருவமழை கைகொடுத்து வருவதால், அணைகளில் நீர் இருப்பு, 173 டி.எம்.சி.,யாக உயர்ந்துள்ளது.
தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில், 90 அணைகள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு, 224 டி.எம்.சி.,யாகும். இதில், மேட்டூர், பவானிசாகர், முல்லை பெரியாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட, 15 முக்கிய அணைகளின் கொள்ளளவு மட்டும் 198 டி.எம்.சி., ஆகும்.
பெரும்பாலான அணைகள், ஒரு டி.எம்.சி.,க்கும் குறைவான கொள்ளளவு உடையவை. வடகிழக்கு பருவமழை காரணமாக, பல அணைகளுக்கு தொடர்ச்சியாக நீர் வரத்து உள்ளது. இதனால், அவற்றின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, 90 அணைகளிலும் சேர்த்து, 173 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.
அதிகபட்சமாக, சேலம் - மேட்டூர் அணையில், 79.7; ஈரோடு - பவானிசாகரில், 26.9; கோவை - பரம்பிக்குளத்தில் 12.7; திருவண்ணாமலை - சாத்தனுார் அணையில், 7.09 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.
அணைகளின் மொத்த கொள்ளளவில், 77.2 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது. மழை தொடர்வதால், பல அணைகள் முழு கொள்ளளவை எட்டுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளதாக, நீர் வளத்துறையினர் தெரிவித்தனர்.