நாங்கள் எல்லாம் டாக்டராக 'நீட்' தேர்வே காரணம்: 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள் பெருமிதம்
நாங்கள் எல்லாம் டாக்டராக 'நீட்' தேர்வே காரணம்: 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள் பெருமிதம்
UPDATED : ஜூலை 08, 2025 07:52 AM
ADDED : ஜூலை 07, 2025 12:18 AM

'நீட் நுழைவு தேர்வை அமல்படுத்தியதால் தான், மருத்துவம் படிக்க
முடிந்தது' என, 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள்
தெரிவித்துள்ளனர். இந்த ஒதுக்கீட்டில் தற்போது, 2,818 மாணவர்கள் மருத்துவம்
படித்து வருகின்றனர்.
'நீட்' நுழைவு தேர்வு
வருவதற்கு முன், தமிழகத்தில் ஆண்டுதோறும், 20க்கும் குறைவான அரசு பள்ளி
மாணவர்களே மருத்துவ படிப்பில் சேருவதற்கான வாய்ப்பை பெற்றிருந்தனர்.
அதேநேரம், 99 சதவீத மருத்துவ படிப்பு இடங்களை, தனியார் பள்ளிகளில் படித்த
மாணவர்களே பெற்று வந்தனர்.
பின், தமிழகத்தில் நீட் தேர்வு
நடைமுறைக்கு வந்த பின், இந்த எண்ணிக்கை ஒற்றை இலக்கமாக குறைந்தது. நீட்
தேர்வால், அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு வீணாகி விட்டதாக
குற்றச்சாட்டு எழுந்தது. மாணவர்களின் நலன் கருதி, அ.தி.மு.க., அரசு, ஆறாம்
வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, 7.5
சதவீத ஒதுக்கீட்டை, 2020ல் அமல்படுத்தியது.
இதனால்,
2020 - 21ம் கல்வியாண்டில், 7.5 சதவீத ஒதுக்கீட்டில், 435 அரசு பள்ளி
மாணவர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் சேர்ந்தனர்.
இவர்களுக்கான கல்வி கட்டணம், விடுதி, புத்தகம் உள்ளிட்ட அனைத்துவித
செலவையும், மாநில அரசே ஏற்று வருகிறது.
இந்நிலையில்,
7.5 சதவீத ஒதுக்கீட்டில், 2020ல் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களின்,
நான்கரை ஆண்டு செய்முறை பயிற்சி வகுப்புகள் முடிந்துள்ளன. தற்போது,
ஓராண்டு 'இன்டர்ன்ஷிப்' பயிற்சியில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு,
7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேர்ந்து, பயிற்சி முடித்து அடுத்தாண்டு முதல்
டாக்டர்களாக வெளியே வர உள்ள மாணவர்கள், 'நீட் தேர்வால் தான் எங்களுக்கு
மருத்துவம் படிக்க முடிந்தது' என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஆளும்
தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும், 'நீட்' தேர்வு வேண்டாம் என்று
கூறி வரும் நிலையில், டீக்கடைக்காரர், விவசாய கூலி, ஆட்டோ ஓட்டுநர்
மகன்கள், மகள்கள் வரை, 2,818 பேர் நீட் தேர்வால், தற்போது அரசு மற்றும்
தனியார் கல்லுாரிகளில் மருத்துவம் படித்து வருகின்றனர்.
இது
குறித்து, மருத்துவ கல்வி இயக்குநரக அதிகாரிகள் கூறியதாவது: அரசு பள்ளி
மாணவர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு, அப்போதைய கவர்னர் ஒப்புதல் அளிக்காத
போதும், அவசர சட்டத்தை அரசு கொண்டு வந்து செயல்படுத்தியது. எந்த கட்சி
ஆட்சியாக இருந்தாலும், அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடு சிறப்பாக
செயல்படுத்தப்படுகிறது.
இதன் பலனாக
மருத்துவம் மட்டுமின்றி, பொறியியல், கால்நடை, ஆயுஷ், சட்டம், வேளாண்
படிப்புகளுக்கும், 7.5 சதவீத ஒதுக்கீடு விரிவுபடுத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான
மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்த ஒதுக்கீட்டில் சேரும்
மாணவர்களின் அனைத்து செலவையும் அரசே ஏற்பதால், எவ்வித சிரமமும் இல்லாமல்
மாணவர்கள் படித்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -