இந்தியா என்பதிலேயே குழப்பத்தில் உள்ளோம்: கவர்னர் ரவி வேதனை
இந்தியா என்பதிலேயே குழப்பத்தில் உள்ளோம்: கவர்னர் ரவி வேதனை
ADDED : மார் 23, 2025 12:12 AM

சென்னை: ''கலாசார விழாவை கொண்டாடும் போது, இது போன்ற விழாவை நாமும் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை, அனைவரின் மத்தியில் உருவாக்க வேண்டும்,'' என, தமிழக கவர்னர் ரவி தெரிவித்தார்.
பீஹார் மாநிலம் உருவான தினத்தையொட்டி, அம்மாநிலத்தின் கலை, கலாசாரம், பண்பாடு குறித்த கண்காட்சி மற்றும் விழா, சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது.
கவர்னர் ரவி, கண்காட்சியை துவக்கி வைத்தார். ராம நவமியில் பாடப்படும் ராமர் பாடலை, இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து பாடி, அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
விழாவில், அவர் பேசியதாவது:
பீஹார் மாநிலத்தின் கலை, கலாசாரம், பண்பாடு மற்றும் உணவு முக்கியத்துவம் வாய்ந்தது. கலாசாரத்தை போற்றி கடைப்பிடிக்க வேண்டும்.
அதற்கு, இது போன்ற விழாவை கொண்டாட வேண்டும். சுதந்திரத்திற்கு முன், 15 மாநிலங்கள் தான் இருந்தன. தற்போது, 28 மாநிலங்கள் மற்றும் ஏழு யூனியன் பிரதேசங்கள் உள்ளன.
ஒவ்வொரு மாநில மக்களும், தங்கள் மாநிலத்தின் கலாசாரத்தை உணர்ந்திருப்பது முக்கியமானது.
அதுதான் பாரதத்தை உருவாக்கியுள்ளது. அதை நாம் விட்டுவிடக்கூடாது. ஏனெனில், 'பாரத்' என்பது ஒன்றே ஒன்று தான்.
துரதிருஷ்டவசமாக நம் கல்வி முறையில், 'பாரத்' என்றால் என்ன என்பதை அறிமுகம் செய்யவில்லை. இந்தியா என்பதிலேயே குழப்பத்தில் உள்ளோம்.
அதில், அரசியல் உள்ளது. பாரத் போல தனித்துவமான நாடு, உலகில் எதுவும் இல்லை. ஏனெனில், அவை ஆட்சியாளர்கள், ராணுவ வீரர்கள், சக்தி வாய்ந்த மனிதர்களால் பிடிக்கப்பட்டு அதிகாரத்தால் உருவாக்கப்பட்டவை.
ஆனால், பாரத் அப்படி இல்லை. பல மன்னர்கள், பேரரசர்களால் வழி நடத்தப்பட்டது. அவர்கள் எப்போதும் பாரதத்திற்காகவே நின்றுள்ளனர். இதற்கு, பல்லாயிரம் ஆண்டு வரலாற்று சான்று உள்ளது.
கடந்த 1947ல் இருந்து தான், இந்நாடு அரசியல் நாடாக உருவானது. என் பாட்டி ராமேஸ்வரம் வந்துள்ளார். அப்போது அவரது பயணத்திற்கு, மொழி ஒரு பிரச்னையாக இருக்கவில்லை என்று கூறினார். தற்போது, மொழியை பற்றி நிறைய பேசி வருகிறோம்.
இவ்வாறு கவர்னர் பேசினார்.