மிரட்டினால் பயப்பட நாங்கள் அ.தி.மு.க., கிடையாது: உதயநிதி பேச்சு
மிரட்டினால் பயப்பட நாங்கள் அ.தி.மு.க., கிடையாது: உதயநிதி பேச்சு
UPDATED : மார் 03, 2025 10:19 AM
ADDED : மார் 02, 2025 10:24 PM

சென்னை: '' மத்திய அரசு மிரட்டினால் பயப்பட நாங்கள் அ.தி.மு.க.,வோ, எடப்பாடி பழனிசாமியோ கிடையாது,'' என துணை முதல்வர் உதயநிதி கூறினார்.
சென்னையில் நடந்த முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் உதயநிதி பேசியதாவது: சென்னை மெட்ரோ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தான் கொண்டு வந்தார். புதிய கல்விக் கொள்கை, ஹிந்தித் திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என ஸ்டாலின் சொல்லி உள்ளார். அனைத்து வகைகளிலும் ஹிந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. புதிய கல்விக் கொள்கை மூலம் ஹிந்தியை திணிக்க நேரடியாக முயற்சி செய்கிறது. புதிய கல்விக் கொள்கையையும், ஹிந்தித் திணிப்பையும் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தான். ஹிந்தியை குறுக்கு வழியில் திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. மத்திய அரசுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். தற்போது நடப்பது தி.மு.க., ஆட்சி. நீங்கள் மிரட்டினால் பயப்பட நாங்கள் அ.தி.மு.க.,வோ, இ.பி.எஸ்., ஓ கிடையாது.
ஹிந்தித் திணிப்பால் ஹரியானா, பீஹார் மற்றும் உ.பி, மாநிலங்களின் தாய்மொழி அழிந்துவிட்டது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகிறார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் ரூ.6 ஆயிரம் கோடி தருவதாக சொல்கிறார்கள். ஹிந்தியை திணிக்க முயல்கின்றனர். தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க முயன்றால், மாநிலத்தில் மீண்டும் மொழிப் போர் ஏற்படும்.
தமிழகத்திற்குள் ஹிந்தியை அனுமதித்தால் நம்முடைய தாய்மொழி அழிந்துவிடும் தொகுதி மறுவரையறை மூலம் வட மாநிலங்களுக்கு தொகுதிகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால் தமிழகத்திற்கும் உயர்த்த வேண்டும். இவ்வாறு உதயநிதி பேசினார்.