பா.ஜ.,வுக்கு பயப்பட நாங்கள் அடிமைகள் அல்ல: உதயநிதி
பா.ஜ.,வுக்கு பயப்பட நாங்கள் அடிமைகள் அல்ல: உதயநிதி
ADDED : பிப் 18, 2024 03:34 AM

திருப்புத்துார் : ''மத்திய பா.ஜ., அரசின் மிரட்டலுக்கு பயப்படுவதற்கு, தி.மு.க., அடிமைகள் அல்ல. எதை வேண்டுமானாலும் சந்திப்போம்,'' என, அமைச்சர் உதயநிதி பேசினார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் அருகே ந.வைரவன்பட்டியில், தி.மு.க., மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டச் செயலரான அமைச்சர் பெரிய கருப்பன் தலைமை வகித்தார்.
தி.மு.க., இளைஞரணி செயலரும், அமைச்சருமான உதயநிதி பேசியதாவது:
கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், 38 தொகுதிகளில் லட்சக்கணக்கான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். அடுத்து உள்ளாட்சி தேர்தலில் நாம் வெற்றி பெற்றோம்.
அப்போது, நாம் எதிர்க்கட்சியாக இருந்தோம். தொடர்ந்து சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றோம்.
இப்போது நாம் ஆளுங்கட்சி. வரும் லோக்சபா தேர்தலில், கடந்த தேர்தலை விட, ஒரு ஓட்டு குறைவானால் கூட எதிர்க்கட்சிகள் நமக்கு ஓட்டும், மக்கள் செல்வாக்கும் குறைந்துவிட்டது என்பர்.
இப்போது நாம் வாங்கும் ஓட்டுகள் தான், 2026 சட்டசபை தேர்தலுக்கு முக்கியம்.
மத்திய பா.ஜ., ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது. அ.தி.மு.க., ஆட்சியின்போது, மாநிலத்தின் அனைத்து உரிமைகளையும் மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டனர்.
சமீபத்தில் தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டது; மத்திய அமைச்சர்கள் வந்தனர்.
அவர்களிடம் முதல்வர் நிவாரணம் கேட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் தலா 6,000 ரூபாய் வழங்கினார். ஆனால், மத்திய அரசு ஒரு பைசா கூட நிவாரணம் கொடுக்கவில்லை.
அனைத்து கார்ப்பரேட்களுக்கானது தான் பா.ஜ., அரசு. அக்கட்சி ஆட்சியின் ஒன்பது ஆண்டில் வளர்ந்தது மோடியின் நெருங்கிய நண்பரான அதானி குடும்பம் மட்டும் தான்.
கம்பெனி துவக்கிய ஆறு ஆண்டுகளில் உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாமிடம் பெற்றார். ஏர்போர்ட், துறைமுகம் என, அனைத்து துறைகளும் அவரிடம் வழங்கப்பட்டு விட்டது.
இதை அ.தி.மு.க., தட்டிக் கேட்காமல் இருக்க சி.பி.ஐ., - இ.டி., என உருட்டி மிரட்டினர். இப்போது, நம்மையும் மிரட்டிப் பார்க்கின்றனர். ஆனால், தி.மு.க., அடிமை அல்ல பயப்படுவதற்கு.
எதை வேண்டுமானாலும் சந்திப்போம். நிதி நெருக்கடியிலும் சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக முதல்வர் நிறைவேற்றி வருகிறார். அதை மக்களிடம் கூறுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.