ஆவின் பால் கம்மி விலையில் கொடுக்கிறோம்; அதனால் குறைக்கவில்லை: அமைச்சர்
ஆவின் பால் கம்மி விலையில் கொடுக்கிறோம்; அதனால் குறைக்கவில்லை: அமைச்சர்
ADDED : டிச 05, 2025 03:41 AM

சென்னை: ''ஆவின் பொருட்களை கம்மி விலையில் கொடுப்பதால், ஜி.எஸ்.டி., குறைப்புக்கு பின், அவற்றின் விலையை குறைக்கவில்லை'' என, தி.மு.க.,வைச் சேர்ந்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி., செப்., 22ல் குறைக்கப்பட்டது. அனைத்து நிறுவனங்களும், பொருட்களுக்கான விலையை குறைத்தன. ஆனால், ஆவின் நிறுவனம் பால் பொருட்கள் விலையை குறைக்கவில்லை.
இது, கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதை தொடர்ந்து, தீபாவளி பண்டிகையின்போது, பண்டிகை கால தள்ளுபடி என கூறி, பால் பொருட்களின் விலையை சற்று குறைத்தது.
இம்மாதம் 1ம் தேதியில் இருந்து, மீண்டும் விலையை உயர்த்தியது. இதற்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், 'ஆவின் என்றால் சுண்ணாம்பு; வட இந்திய கம்பெனிகள் என்றால் வெண்ணெய்' என்ற அடிப்படையில் அற்ப அரசியல் பேசுகின்றனர்.
அவர்கள் கவனத்திற்கு என கூறி, ஆவின் பொருட்களின் விலையை மற்ற நிறுவனங்களின் விலையோடு ஒப்பிட்டுள்ளார்.
அதாவது, ஆவின் பொருட்களை கம்மி விலைக்கு கொடுப்பதால், விலையை குறைக்கவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

