சமரச தீர்விற்கு நாங்கள் தயாராக உள்ளோம்: ராம ரவிகுமார் தரப்பு வாதம்
சமரச தீர்விற்கு நாங்கள் தயாராக உள்ளோம்: ராம ரவிகுமார் தரப்பு வாதம்
ADDED : டிச 18, 2025 06:16 AM

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததற்கு எதிராக, அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், 'கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாப்பது அறநிலையத்துறையின் கடமை; அதை பாதுகாக்க அறநிலையத்துறை தவறிவிட்டது.
'இந்நீதிமன்றம் மூலம் நேரடியாக சுமுகமாக சமரச தீர்வு காண பிரதான மனுதாரரான ராம ரவிகுமார் தரப்பு தயாராக உள்ளது' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலையில் தீபத்துாணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 'தீபத்துாணில் மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பில் தீபம் ஏற்ற போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என டிச.,4ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
அவமதிப்பு வழக்கு டிச.,9ல் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'தமிழக தலைமைச் செயலர், சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., காணொலியில் ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தலைமைச் செயலர், ஏ.டி.ஜி.பி., போலீஸ் கமிஷனர் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இம்மனுக்கள் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன், நேற்று நான்காவது நாளாக விசாரணைக்கு வந்தன.
மனுதாரர்கள் ராம ரவிக்குமார், பரமசிவம், அரசு பாண்டி, கார்த்திகேயன் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.ஸ்ரீராம், வள்ளியப்பன், வழக்கறிஞர்கள் அருண்சுவாமிநாதன், நிரஞ்சன் எஸ்.குமார், சுப்பையா ஆஜராகினர்.
ஸ்ரீராம்: தீபத்துாணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்ற அரசு தரப்பின் நிலைப்பாடு ஏற்புடையது அல்ல.
ஒரு வழக்கு அடிப்படையில், 'எதிர்காலத்தில் தேவையெனில், வேறு இடத்தில் தீபம் ஏற்றும் வகையில் மாற்றம் செய்வது குறித்து, அதிகாரிகள் பரிசீலித்து முடிவெடுக்கலாம்' என, 1996ல் உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிபதிகள்: அந்த உத்தரவில் தீபத்துாண் என எதுவும் குறிப்பிடப்படவில்லை.
மனுதாரர் தற்போது கோவில் செயல் அலுவலருக்கு அனுப்பிய மனுவில், மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். தீபத்துாணில் ஏற்ற வேண்டும் என குறிப்பிடவில்லை.
ஸ்ரீராம்: கடந்த, 1920ல் சிவில் வழக்கு உத்தரவின்படி, மலையில் தீபத்துாண் அமைந்துள்ளது. அதில் தீபம் ஏற்றியதற்கு ஆதாரம் உள்ளது. அதற்குரிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
'மலையில் அமைந்துள்ளது தீபத்துாண் என்பதற்கு ஆதாரம் இல்லை. அது நில அளவை எல்லையை குறிக்கும் சர்வே கல். அது கிரானைட்டால் ஆனது. சமணர்கள் காலத்து துாண். அத்துாணில் இரவில் சமணர்கள் தீபம் ஏற்றுவர்' என அரசு தரப்பில் மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்விவகாரத்தை சிவில் வழக்காக மாற்ற அரசு, தர்கா நிர்வாகம் தரப்பில் முயற்சிக்கப்படுகிறது. மனுதாரர் அனுப்பிய மனுவை கோவில் செயல் அலுவலர் நிராகரித்ததை எதிர்த்து, அறநிலையத்துறை கமிஷனரிடம் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்கின்றனர்.
தீபத்துாண் அல்ல என அறநிலையத்துறை மறுக்கும் நிலையில், அவர்களிடம் மேல்முறையீடு செய்தால் தீர்வு கிடைக்காது.
கோவில் நிர்வாகம், அறநிலையத்துறை, அரசு தரப்பு என ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலைப்பாட்டில் உள்ளதால், சமரச தீர்வு மூலம் பயன் ஏற்படாது. அரசு தரப்பு வேண்டுமென்றே நிலைமையை சிக்கலாக்குகிறது.
வள்ளியப்பன்: தீபத்துாணில் தீபம் ஏற்றினால் மட்டுமே சுற்றிலும் வசிக்கும் மக்களுக்கு தெரியும். அது தீபத்துாண் அல்ல என மறுப்பதற்கு சான்றுகள் இல்லை. இந்நீதிமன்றம் மூலம் நேரடியாக சுமுகமாக சமரச தீர்வு காண பிரதான மனுதாரரான ராம ரவிகுமார் தரப்பு தயாராக உள்ளது.
கோவில், தர்காவிற்கு சொந்தமான பகுதிகள் குறித்து எல்லையை நிர்ணயிக்க மலையை அளவீடு செய்ய கமிஷனரை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
அரசு தரப்பு வாதத்திற்காக விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.

