உண்மையான எதிர்க்கட்சி நாங்கள் தான்: பன்னீர்செல்வம்
உண்மையான எதிர்க்கட்சி நாங்கள் தான்: பன்னீர்செல்வம்
ADDED : ஜன 17, 2025 09:14 PM

சென்னை:''தற்போது, தொண்டர்களின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவாக, உண்மையான எதிர்க்கட்சியாக நாங்கள் செயல்படுகிறோம்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.
எம்.ஜி.ஆர்., பிறந்த நாளை யொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள, அவரது உருவச் சிலைக்கு, நேற்று அவர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
பின், அவர் கூறியதாவது:
எம்.ஜி.ஆர்., எந்த நோக்கத்திற்காக, இந்த இயக்கத்தை உருவாக்கினார் என்பதை நன்கு அறிவோம். எம்.ஜி.ஆரின் நோக்கத்தை நிரூபித்துக் காட்டியவர் ஜெயலலிதா.
பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க., சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே, தொண்டர்கள் மற்றும் பொது மக்களின் விருப்பம். எம்.ஜி.ஆர்., பிறந்த நன்னாளில் அனைவரும் இணைந்து, வரும் தேர்தலை எதிர்நோக்கினால், நம்மை எவராலும் வெல்ல முடியாது. அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே, எங்களின் தலையாய கோரிக்கை.
தற்போது, தொண்டர்களின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவாக, உண்மையான எதிர்க்கட்சியாக நாங்கள் செயல்படுகிறோம். இந்தக் குழு உருவான நாள் முதல், அரசின் மெத்தனப்போக்கு, சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் குறித்து, மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளோம். எனவே, ஆளும் கட்சியினருக்கு உண்மையான எதிர்க்கட்சி நாங்கள் தான்.
உலகில் எங்கும் இல்லாத கூட்டணி போல், ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்திருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியை பார்த்து முதல்வர், 'ஹலோ ஹலோ சுகமா' என்பதும், அதற்கு அவர், 'நீங்கள் நலமா' என்பதும் தான் சட்டசபையில் நடக்கிறது.
அ.தி.மு.க., என்னும் மாபெரும் இயக்கம் இணைய வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஆனால், பழனிசாமி தரப்பினர் இணைய முடியாது எனச் சொல்கின்றனர். உலகிலேயே பிரிந்த சக்திகள் இணையக்கூடாது எனக் கூறும் ஒரே நபர் பழனிசாமி என்பதை மக்களும், தொண்டர்களும் நன்கு அறிவர். அதையும் மீறி கட்சி கட்டாயம் இணையும். பழனிசாமி முகத்தில் கரி பூசப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.