பாகிஸ்தானின் இதயம் போன்ற பகுதிகளில் தாக்குதல் நடத்தினோம்: ராணுவ தளபதி பெருமிதம்
பாகிஸ்தானின் இதயம் போன்ற பகுதிகளில் தாக்குதல் நடத்தினோம்: ராணுவ தளபதி பெருமிதம்
ADDED : ஆக 11, 2025 08:22 AM

சென்னை : ''ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையில், இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது,'' என, ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி தெரிவித்தார்.
இந்திய ராணுவம், 'அக்னிஷோத்' என்ற ராணுவ ஆராய்ச்சி பிரிவை, சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் துவக்கி உள்ளது. இதை கடந்த 4ம் தேதி, ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி துவக்கி வைத்து பேசியதாவது: இந்திய ராணுவத்தில், மனித வளத்தையும், தொழில்நுட்பத்தையும் ஒரு சிறந்த பிணைப்பாக காணலாம்.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, எந்தவிதமான முடிவுகளை எடுக்கலாம் என்று யோசிக்கலாம். ஆனால், இறுதியான முடிவு எடுக்க வேண்டியது, மனிதனின் மூளை தான்.பஹல்காம் தாக்குதல் நாட்டையே அதிர்ச்சி அடையச் செய்தது. தாக்குதல் நடத்தப்பட்ட மறுநாளே, ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில், அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.
அதில், முப்படை தளபதிகளும் பங்கேற்றனர். கூட்டத்தில் அமைச்சர் ராஜ்நாத்சிங், 'பொறுத்தது போதும்' என்றார். அத்துடன், 'பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுங்கள்' எனக்கூறி, எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்காமல், எங்களுக்கு முழு சுதந்திரம் வழங்கினார்.
அப்போது தான், நாங்கள் முதல் முறையாக, ஒரு அரசியல் தெளிவை கண்டோம். இதுவே ராணுவ தளபதிகள், களத்தில் தங்கள் திறனை வெளிப்படுத்த உதவியது. இதைத்தொடர்ந்து, ஏப்ரல் 25ல் நாங்கள் அனைவரும், வடக்கு கட்டளை பகுதிக்கு நேரில் சென்று, இலக்குகளை பார்வையிட்டோம். எவ்வாறு பதில் தாக்குதல் வழங்க வேண்டும் என்று திட்டமிட்டோம்.
பிறகு, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை வழியே, ஏழு இடங்களில் இருந்த, ஒன்பது பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தோம். அதில், பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயர், எவ்வாறு நாட்டை இணைக்கிறது என்பதை காண முடிந்தது.
ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கைக்கு பின் வீரர்களை சந்தித்தேன். அவர்களிடம் ஒன்றைகூறினேன். 'நாட்டில் எந்த ஒருே சகோதரியோ, அம்மாவோ, மகளோ, குங்குமம் வைத்துக் கொள்ளும் போதெல்லாம், அவர்களுக்கு ராணுவ வீரர்களின் ஞாபகம் இருக்கும்' என்றேன்.
நாம் பாகிஸ்தானின் இதயம் போன்ற பகுதிகளில் தாக்குதல் நடத்தினோம். இதை பாகிஸ்தான் எதிர்பார்த்திருக்காது. நம் தாக்குதலுக்கு அவர்கள் பதில் தாக்குதல் நடத்துவர் என்று எதிர்பார்த்தோம். அதற்காக, ஜம்மு - காஷ்மீரில் ஐந்து இடங்களையும், பஞ்சாப்பில் நான்கு இடங்களையும், தேர்வு செய்து தயாராக இருந்தோம்.
ஆப்பரேஷன் சிந்துார் ஒரு சதுரங்க ஆட்டம் போன்றது. எதிரியின் அடுத்தகட்ட நகர்வுகள் என்ன என்பதை கணிக்க முடியாத சூழலில், நடவடிக்கை மேற்கொண்டோம். இதில், தரைப்படை சதுரங்க ஆட்டத்தை சிறப்பாக ஆடியது. எவ்வளவு வீரர்கள் முன்னேற வேண்டும், எவ்வளவு வீரர்கள் பின்னால் நிற்க வேண்டும், எவ்வளவு பேர் மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என, ஒரு சதுரங்க ஆட்டம் ஆடுவதை போல செயல்பட்டனர்.
சில இடங்களில் எதிரிகளுக்கு, நாம், 'செக்மேட்' வைத்தோம். சில இடங்களில் நம் வீரர்கள் உயிரை இழக்கும் சூழலும் இருந்தது. இருப்பினும், நாம் வெற்றியை நோக்கி தொடர்ந்து முன்னேறி சென்றோம். இது, போர் அல்ல, ஆனால், அதற்கு சற்றும் குறைவில்லாத ஒன்று என்றே கூற வேண்டும். வெற்றி என்பது மனதில் தான் இருக்கிறது.
பாகிஸ்தானியர்களிடம் சென்று, நீங்கள் போரில் வெற்றி பெற்றீர்களா அல்லது தோற்றீர்களா என்று கேட்டால், அவர்கள் சொல்வது, எங்கள் நாட்டு ராணுவ தளபதி பீல்டு மார்ஷல் பதவி பெற்றிருக்கிறார். அதனால், நாங்கள் வெற்றி பெற்றிருப்போம் என்பர். இவ்வாறு அவர் பேசினார்.