‛முகாம் நடத்தி உதவலாம்: வி.ஏ.ஓ.,' ‛மக்கள் அலையட்டும்: அதிகாரிகள்'
‛முகாம் நடத்தி உதவலாம்: வி.ஏ.ஓ.,' ‛மக்கள் அலையட்டும்: அதிகாரிகள்'
UPDATED : ஜூலை 31, 2025 12:57 AM
ADDED : ஜூலை 30, 2025 11:01 PM

சென்னை:'பிழைகளுடன் வழங்கப்பட்ட பட்டாக்களை பயன்படுத்த முடியாமல் மக்கள் தவிக்கும் நிலையில், முகாம் நடத்தி பிழைகளை திருத்தலாம்' என, வி.ஏ.ஓ.,க்கள் பரிந்துரைத்தும், உயர் அதிகாரிகள் மறுப்பதாக புகார் எழுந்து உள்ளது.
தமிழகத்தில் சொத்து விற்பனை தொடர்பான பத்திரப்பதிவு, பட்டா மாறுதல் பணிகள், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டு உள்ளன. இதில் கடந்த, 2000ம் ஆண்டு முதல் பட்டா உள்ளிட்ட ஆவணங்கள், கணினி முறைக்கு மாற்றப்பட்டன.
வழிமுறை அப்போது, ஆவணங்களில் இருந்த விபரங்கள், தற்காலிக பணியாளர்கள் வாயிலாக கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதில் பெரும்பாலான இடங்களில், சொத்தின் உரிமையாளர், சர்வே எண், உட்பிரிவு எண், பரப்பளவு போன்ற தகவல்களில், பிழைகள் காணப்படுகின்றன.
இந்த பிழைகளை சரி செய்ய, வருவாய் துறையில் உரிய வழிமுறைகள் இல்லை.
இது குறித்து, பொது மக்கள் கூறியதாவது:
பட்டாவில் உள்ள பிழைகளை சரி செய்ய, தாலுகா அளவில் முகாம்கள் நடத்த வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர்ந்து பரிந்துரைத்து வருகின்றனர். ஆனால், வருவாய் துறை அதிகாரிகள், 'முகாம் நடத்த வேண்டாம். பிழை திருத்தம் கோரி வருவோரிடம் மனு பெற்று, நடவடிக்கை எடுங்கள்' எனக் கூறி உள்ளனர்.
இதனால், மக்கள் பிழை திருத்தத்திற்காக, அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. பட்டாவில் பிழைகளை திருத்தும் அதிகாரம் யாருக்கு என்பதில் தெளிவு இல்லாததே, இப்பிரச்னைக்கு முக்கிய காரணமாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நடவடிக்கை என்ன? வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தாலுகா அளவில் பெறப்பட்ட விபரங்கள் அடிப்படையில், ஊரகப் பகுதிகளில், 46,387 பட்டாக்களிலும், நகர்ப்புறங்களில், 7.02 லட்சம் பட்டாக்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், தொடர்ந்து இதுபோன்ற புகார்கள் வருவதால், முகாம் நடத்த வாய்ப்புள்ளதா என்பதை ஆராய்ந்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.